இ
ந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராம்நாத் கோவிந்த். பிஹார் ஆளுநராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ராம்நாத் கோவிந்த் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனது அறிவுத் திறன், உழைப்பு ஆகியவற்றால் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்திருக்கிறார். பாஜக தலைமை அவர் மீது வைத்த நம்பிக்கை சரியானதே என்பதை அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மீரா குமாரைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இடம்பெற்றிருந்தவர் எனினும் சங்கப் பரிவாரத்தில் முழுக்க முழுக்கத் தோய்ந்தவர் அல்ல என்பது ஒரு ஆறுதல்.
குடியரசுத் தலைவர் எனும் வகையில் அவருக்கு இருக்கும் பொறுப்புகள் பல. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு நாடாளுமன்றம்’ ஏற்பட்ட காலங்களில் பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகியோர் வெவ்வேறு நடைமுறைகளைக் கையாண்டு முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு முன்னுதாரணம் இல்லாத சில சந்தர்ப்பங்கள் கோவிந்த் குடியரசுத் தலைவராகப் பதவி வகிக்கும் காலத்திலும் ஏற்படக்கூடும். மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356-வது கூறை சரியாகவோ, முறையற்றோ பயன்படுத்த வேண்டிய சூழல் வரக்கூடும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் இப்போது கூர்மையாகக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டன. மத்திய அமைச்சரவை இத்தகைய நிலைமைகளில் அனுப்பும் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் என்ற வகையில் ஆராய்ந்து தனது விருப்பஅதிகாரத்துக்கு ஏற்ப முடிவுகளை அவர் எடுக்க வேண்டும். மிகுந்த சர்ச்சையை அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களுக்கான மசோதாக்கள் கையெழுத்துக்கு வரும்போது தன்னுடைய அறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நல்ல ஆலோசனைகளைக் கூறி அரசின் முடிவுகளை மாற்ற அவர் தயங்கக் கூடாது. முக்கியமான கட்டங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசுக்கு அவர் ஆலோசனை கூற வேண்டும்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம், தாங்கள் அனைத்துத் தரப்பையும் அரவணைத்துச் செல்லவே விரும்புவதாகக் காட்டிக்கொண்டிருக்கிறது பாஜக. குடியரசுத் தலைவர் எனும் முறையில் அவர் அரசியல், சமூக அடையாளங்களிலிருந்து விடுபட்டு, அனைவருக்குமானவராகப் பணியாற்ற வேண்டும். அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள் நிகழும்போது அவற்றைக் கண்டிக்கவும், அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கவும் தயங்கக் கூடாது. அரசு கொண்டுவரும் ஆணைகளில் எல்லாம் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக இல்லாமல் தேவையான விளக்கம் கேட்டு நல்ல முடிவுகளை எடுக்கும் குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்து ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்!