பொதுச் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தில் இரட்டைக் கட்டுப்பாட்டை எப்படி மேற்கொள்வது என்பதில் ‘ஜிஎஸ்டி பேரவை’ கருத்தொற்றுமையுடன் நல்ல முடிவை எட்டியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் தலைமையிலான இக்குழுவில், அனைத்து மாநில நிதி அல்லது வருவாய்த் துறை அமைச்சர்களும் உறுப்பினர்கள். 2017 ஏப்ரல் 1 முதல் பொதுச் சரக்கு - சேவை வரியை அமலாக்க வேண்டும் என்ற முடிவை மாற்றிக்கொண்டு, ஜூலை 1 முதல் அமலாக்குவது என்ற காரிய சாத்தியமான முடிவைப் பேரவை எடுத்திருக்கிறது.
மத்திய - மாநில அரசுகள் எண்ணற்ற வணிக வரி விகிதங்களை இப்போது அமலாக்கிவருகின்றன. இவற்றைப் பொதுச் சரக்கு சேவை வரியாக மாற்றிய பிறகு எந்த அரசு, எந்த அளவுக்கு வரி வசூல் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பேசப்பட்டது. ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை விற்றுமுதல் உள்ள வணிக வரி செலுத்தும் நிறுவனங்களில் 90% இனி அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும். எஞ்சிய 10% நிறுவனங்கள் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உட்படும். ரூ.1.5 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களைப் பாதியாகப் பிரித்து, ஒரு பாதியைச் சம்பந்தப்பட்ட மாநில அரசும் எஞ்சியதை மத்திய அரசும் வரி மதிப்பீடு செய்யும்.
பொதுச் சரக்கு சேவை வரி அமலாக்கத்தை ஜூலை 1 முதல் மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதால், அடுத்து தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கையின்போது, சில மறைமுக வரி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது வணிகத் துறைக்கு ஊக்குவிப்பாக இருப்பதுடன் நுகர்வோரின் வரிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும். பேரவையின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 18-ல் நடைபெறவிருக்கிறது. வணிகர்களைப் போலவே தொழில்துறையினருக்கும் புதிய பொதுச் சரக்கு - சேவை வரி குறித்துச் சில ஐயங்களும் அச்சங்களும் காணப்படுகின்றன. அவற்றைப் போக்க இந்தக் கூட்டம் உதவ வேண்டும்.
இப்போதுள்ள வணிகவரிச் சட்டங்களுக்குப் பதிலாகப் புதிய சட்டம் இயற்றப்பட்டால், அதைப் படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளவும், அதற்கேற்ப கணக்குப் பதிவு நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் ஆறு மாத காலமாவது அவகாசத்தை வணிக நிறுவனங்கள் கேட்டுள்ளன. பொதுச் சரக்கு, சேவை வரிச் சட்ட வரைவில் 21 விதமான குற்றங்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கும் அதே சமயத்தில், வணிக நிறுவனங்களை வணிக வரித் துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு, தேவையின்றி அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வரியைக் கொண்டுவருவதன் நோக்கத்துக்கும் அதன் நடைமுறைக்கும் இடையில் தேவையற்ற இடைவெளிகள் ஏற்பட அனுமதிக்கக் கூடாது. அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பின்றி இதன் அமலாக்கம் அமைய மாநில அரசுகளுடனும் வணிகத் தரப்புடனும் அரசு தொடர்ந்து பேச வேண்டும்.