தலையங்கம்

இந்திய பாட்மிண்டனின் எழுச்சி

செய்திப்பிரிவு

இந்திய பாட்மிண்டன் அணி இப்போது உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பி. சாய் பிரணீத், எச்.எஸ். பிரணய் ஆகியோரும் முதல்தர ஆட்டக்காரர்களை இந்த ஆண்டில் தோற்கடித்துள்ளனர்.

24 வயதாகும் கே. ஸ்ரீகாந்த் இரண்டு பெரிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று நம்மைப் பெருமையில் ஆழ்த்தியிருக்கிறார். எட்டு நாட்களுக்குள் இந்தோனேசிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் என்ற இரு போட்டிகளிலும் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். தர வரிசையில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்த கொரியாவின் சான் வான் ஹோ என்பவரை இரண்டு வாரங்களுக்குள் இரண்டு முறை தோற்கடித்திருக்கிறார் காந்த்.

இப்போதைய உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனத்தின் சென் லாங் என்ற வீரரையும் சிட்னியில் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்திருக்கிறார். உலகின் நாலாவது இட ஆட்டக்காரரான சீனத்தின் ஷி யுகியையும் இந்த ஆண்டிலேயே இரண்டு முறை தோற்கடித்திருக்கிறார். உலகின் முதல் 10 ஆட்டக்காரர்கள் வரிசையில் ஸ்ரீகாந்த் மீண்டும் இடம் பெற்றுவிடுவார்.

2014 ஜூலையில் மூளைக் காய்ச்சல் நோய்க்கு ஆளான அவர் பிறகு உலகின் மூன்றாவது இட ஆட்டக்காரராக 2015-ல் தகுதி பெற்றார். சீனத்தின் முன்னணி பாட்மிண்டன் வீரர்கள் அனைவரையும் வென்று அசத்தியவர் அவர்.

அதேபோல், சிங்கப்பூர் ஓபன், தாய்லாந்து ஓபன் ஆகிய பட்டங்களை வென்றுள்ள பிரணீத் தன்னுடைய முழுத் திறனையும் இப்போது உணர்ந்திருக்கிறார். இந்தோனேஷியா ஓபன் போட்டியில் லீ சாங் வெய், சென் லாங்க் ஆகியோரை அடுத்தடுத்த போட்டிகளில் வென்ற பிரணாய் இப்போது எவராலும் வெல்ல முடியாத நிலையை எட்டியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் வரும் ஆகஸ்ட் மாதம் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்குச் சிறப்பான வெற்றியை நம் வீரர்கள் பெற்றுத்தருவார்கள் எனும் நம்பிக்கை பிரகாசமாக இருக்கிறது. மகளிர் பிரிவில் சாய்னா நெவால், பி.வி. சிந்து ஆகியோர் தங்களுடைய ஆட்டத்திறனை நன்கு பராமரித்துவருகின்றனர்.

இந்த ஆட்டக்காரர்களின் வெற்றியில் கோபி சந்தின் பங்கு அனைவருக்கும் தெரிந்தது. இந்தோனேசியரான பயிற்சியாளர் முல்யோ ஹந்தாயோவுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி பாட்மிண்டன் வீரர்கள் அனைவருமே ஏதாவது ஒரு இந்திய வீரரிடம் தோற்றிருக்கிறார் என்பதே இதற்குச் சான்று. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் தலா ஒரு பதக்கத்தை நிச்சயம் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இளம் வீரர்களுக்கு வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT