தலையங்கம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசை நெருக்குங்கள்!

செய்திப்பிரிவு

சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை நெருங்கும் போதெல்லாம் பரபரப்பில் தள்ளப்படுகிறது தமிழகம். கிராமப்புறங்களில் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கான வழமையான உற்சாகத்துக்குப் பதில், ஜல்லிக்கட்டை முன்வைத்த சர்ச்சைகள், போராட்டங்கள் அந்த இடத்தை நிரப்பிவருகின்றன. இந்த ஆண்டில் போராட்டங்கள் உச்சம் தொட்டிருக்கின்றன. தலைநகர் சென்னையில் தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். பல்வேறு அமைப்புகளும் அவர்களுக்குத் துணையாக இறங்கியிருக்கின்றன. மாநில, மத்திய அரசு சார்பில் பேசுபவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவே பேசினாலும், ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை உச்ச நீதிமன்றம் விலக்குவதற்கான சமிக்ஞைகள் எதுவும் கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை.

பொங்கல் பண்டிகையோடு பிரிக்கவே முடியாத உறவைக் கொண்டவை மாடுகள். ஜல்லிக்கட்டு விளையாட்டானது கிராமப்புறத் தமிழகத்துடன் எவ்வளவு உணர்வுரீதியாகப் பிணைக்கப்பட்டது என்பதை அதை வெளியிலிருந்து பார்ப்பவர்களால் அத்தனை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள், மத்திய அரசின் நகர்வுகளின் விளைவாக 2014-ல் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் விலங்குகள் நலன் சார்ந்து பேசும் மேனகா காந்தி முதல் பெடா அமைப்பு வரை ஜல்லிக்கட்டுத் தடைக்காக முன்வைத்த முக்கியமான வாதம் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதும், அதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்குக் காயம், உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதும்தான். மனிதர்களுக்கும் பாதுகாப்பற்றதாக, மாடுகளுக்கும் துன்பம் விளைவிப்பதாக இடைப்பட்ட காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு மாறியது உண்மை. ஆனால், அரசுத் தலையீட்டின்பேரில் பின்னர் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் ஜல்லிக்கட்டு நடத்துவோர் ஏற்றுச் செயல்பட்டார்கள். மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பிலேயே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவந்தது.

“ஜல்லிக்கட்டு விளையாட்டானது உள்ளூர் மாட்டினங்களைப் பாதுகாக்கும் செயல்பாட்டோடு தொடர்புடையது; ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருபவர்களின் பின்னணியில் சர்வதேசச் சந்தை அரசியல் இருக்கிறது” எனும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் வாதம் புறந்தள்ளக்கூடியது அல்ல. புலி, கரடி போன்ற வனவிலங்குகளின் பட்டியலில் இடம்பெறத்தக்கதல்ல மாட்டினம். ஜல்லிக்கட்டு சார்ந்தும் அதில் பங்கேற்போர், காளைகள் சார்ந்தும் அரசுக்கு மேலதிகம் கவலைகள் இருந்தால், அவற்றைக் களைய மேலதிகம் என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அவற்றுக்கு உத்தரவிட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஜல்லிக்கட்டை நடத்துவதே இப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியும்.

இதுவரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே தமிழக அரசும் மாநிலத்தின் அனைத்துப் பிரதான கட்சிகளும் இருக்கின்றன. மத்திய அரசும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தன்னைக் காட்டிக்கொள்கிறது. தமிழக அரசு ஏனைய எதிர்க்கட்சிகளையும் தன்னோடு ஒருங்கிணைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு இது தொடர்பில் தீவிரமான அழுத்தங்களைக் கொடுத்தால், இந்த விவகாரத்தில் நிரந்தரமான தீர்வை எட்டிவிட முடியும். நீதிமன்றத்தில் போராடும் வியூகத்தை அரசியல் களம் நோக்கித் திருப்ப வேண்டும் தமிழக அரசு.

SCROLL FOR NEXT