நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி சிறையில் இருக்கும் அனைவருமே பிணையின் கீழ் வெளியே வருவதை எளிதாக்கும் வகையில் பரிந்துரை களை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான சட்ட ஆணையம். வசதி மிக்கவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் பிணையில் வெளிவருவது எளிதாக இருக்கும் நிலையில், மற்றவர்கள் சிறையில் கிடந்து வாடுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு மீண்டும் ஒரு தடவை இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
குற்றம்சாட்டப்பட்டவரைக் காவலில் வைத்திருப்பதா அல்லது விடுவிப்பதா என்பதைப் பற்றிய முடிவானது, அவருக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அவரது பாலினம், நிறம், இனம், பொருளாதார நிலை மற்றும் சமூக அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையில் எடுக்கப் படக் கூடாது என்று இந்த அறிக்கை கூறுகிறது. தற்போது சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் 67% விசாரணைக் கைதிகளாய் இருப்பதற்கான முக்கியக் காரணம், பிணை வழங்குவதில் உள்ள மிகப் பெரிய அளவிலான முரண்பாடுகள்தான். பிணை வழங்கப் பட்டாலும்கூட, அதைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்குப் பெரும்பாலானவர்களிடம் பொருளாதார வசதி இல்லை.
ஒரு குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதிக் காலத்தைச் சிறையில் கழித்த ஒருவர், சொந்தப் பிணைப் பத்திரத்தின்பேரில் விடுவிக்கப்பட வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 436- ஏ வலியுறுத்துகிறது. இந்நிலையில், ஏழாண்டு காலம் தண்டனை வழங்கப் படுவதற்கான குற்றங்களைச் செய்தவர்கள் அக்கால அளவில் மூன்றில் ஒரு பங்கு சிறையில் இருந்த பிறகு விடுவிக்கப் பட வேண்டும் என்றும், அதைப் போல நீண்ட கால அளவுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனை கால அளவில் பாதியை அனுபவித்த பிறகு விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. முழுத் தண்டனைக் காலத்தையும் விசாரணைக் கைதியாகவே சிறையிலிருந்து கழித்தவர்களுக்கு, அவர்கள் சிறையிலிருந்த காலத்தைத் தண்டனையி லிருந்து குறைக்கலாம் என்றும் அது கூறியுள்ளது.
தேவையற்ற கைது நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையையும், இயந்திரத்தனமான காவல் நீட்டிப்பு உத்தரவு களுக்காகக் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களையும் ஆணையம் கண்டித்துள்ளது. அதற்குப் பதிலாக, பிணையங்கள் மற்றும் பொருளாதாரப் பிணைப் பத்திரங்கள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளின் விளக்கப்பட்டியல் ஒன்றையும் அளித்துள்ளது. அவற்றை உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், சிறைகளில் அளவுக்கு அதிகமானவர்கள் அடைக்கப் பட்டிருக்கும் நிலையில், வறுமையின் காரணமாக நியாயமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பிணைச் சட்டச் சீர்திருத்தங்கள் மட்டும் தீர்வாகாது. விசாரணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதன் வழியாகவே நிரந்தரத் தீர்வு காண முடியும்.