தலையங்கம்

மனித மேம்பாட்டுக் குறியீட்டில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு!

செய்திப்பிரிவு

ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பு வெளியிட்டிருக்கும் 2015-ம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுக் குறியீடுகளின்படி, 188 நாடுகளுக்கு இடையிலான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 131-வது இடத்தில் இருக்கிறது. இந்தியா கடந்த 25 ஆண்டு காலத்தில் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இணையாக மக்கள் நலனிலும் முதலீடுகளைச் செய்திருந்தால், இந்நிலையைத் தவிர்த்திருக்கலாம்.

எனினும், கொள்கை முடிவுகளில் உண்டான சீர்திருத்தங்கள் சில நல்ல விளைவுகளை உருவாக்கியுள்ளன. என்றாலும், மனித மேம்பாட்டுக் குறியீடு காட்டுகின்ற விவரங்களின்படி, மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு எனினும், இடையே குறிப்பிடத்தக்க அளவில் சமமற்ற நிலை தொடர்கிறது. இது வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கிறது.

பிரிக்ஸ் நாடுகளில், இந்தியாவில்தான் வேலை பார்க்கும் பெண்களின் சதவீதம் குறைவு. இந்த நாடுகளில் ஐ.நா.வின் வறுமைக்கான பல்பரிமாண அளவுகோல்களின்படி, கடுமையான வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதும் இந்தியாவில்தான். அனைவருக்கும் கல்வியையும் மருத்துவ வசதிகளையும் வழங்குவதால், வறுமையின் பிடியில் இருப்பவர்களை விடுவிக்க முடியும் என்ற நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் நிலையைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

தரவரிசைப் பட்டியலின் அடிமட்ட நிலையிலிருந்து விடுபட்டு இந்தியா முன்னேற வேண்டுமென்றால், சமூக வளர்ச்சியை எடுத்துக்காட்டும் குறியீடுகளின்மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தங்கம், விமான எரிபொருள் உள்ளிட்ட ஆறு நுகர்வுப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற மானியத்தின் அளவு ரூ.1 லட்சம் கோடி என்று 2014-ல் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. அனைத்து வழிகளிலிருந்தும் கிடைக்கின்ற வருமான அதிகரிப்பைக் கொண்டு அனைவரும் உயர்தரமான பொதுக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மருத்துவ வசதிகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மனித மேம்பாட்டு அளவீட்டில் போதுமான கவனம் காட்டாதிருப்பதே ஜனநாயக அரசுமுறை என்றாகிவிட்ட நிலையில், நீதியைப் பெறுவதற்கான உரிமைகளிலும் அது பிரதிபலிப்பதுதான் சோகம். சித்ரவதை, இடம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான உரிமைகள், கடத்தலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஐ.நா. உடன்படிக்கைகளில் இந்தியா கையெழுத்திடாததும் கவனிக்க வேண்டிய விஷயம்.

மனித மேம்பாடு என்பது, பல பரிமாணங்களைக் கொண்ட விஷயம் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன்களால் வலுவான அமைப்புகளை உருவாக்கவும், அனைத்துப் பிரிவினருடைய உடல்நலத்தை மேம்படுத்தவும் வேண்டும். வாழ்க்கைத் தரத்தை நிலையானதாக்குவதும் அதை மேம்படுத்துவதும் நகர்மயமாதல், குடியிருப்புப் பற்றாக்குறை, மின்வசதி, நீர், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற வளர்ந்துவரும் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் கொள்கைத் திட்டங்களையே சார்ந்திருக்கிறது. அரசு இப்போதே அதற்குத் தயாராக வேண்டும்!

SCROLL FOR NEXT