தமிழ்ப் புதுக்கவிதையைப் பெரிய அளவில் ஜனநாயகப் படுத்தியவர் ஞானக்கூத்தன். வடிவ இறுக்கம், தத்துவ விசாரம், படிமச் சுமையால் திணறிக்கொண்டிருந்த தமிழ்ப் புதுக்கவிதைக்குக் கேலிப் பண்பையும் புன்னகையையும் அளித்தது அவரது பிரதான பங்களிப்பு. மரபின் சந்தம், வெகுமக்கள் பேச்சுவழக்கு, குழந்தைப் பாடல்களின் எளிமை, மாறிவரும் வாழ்க்கை குறித்த நுணுக்கமான அவதானங்கள் என அரை நூற்றாண்டுக்கும் மேல் புதுக்கவிதை என்னும் வடிவத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டு இயங்கிய ஒருசில கவிஞர்களில் ஒருவர்.
தஞ்சை மாவட்டத்தின் ரம்மியமான சிற்றூர்களில் ஒன்றான திருஇந்தளூரில், 1938 அக்டோபர் ஏழாம் நாள் அன்று பிறந்தவர் ஞானக்கூத்தன். இயற்பெயர் அரங்கநாதன். சைவ, வைணவக் கோயில்கள் இரண்டுக்கும் அருகில் இளமைப் பருவத்தைக் கழித்தவர் ஞானக்கூத்தன். பாசுரங்கள், பிரபந்தங்களை அர்த்தம் விளங்கிக்கொள்வதற்கு முன்னரே இயல்பாகவே கவிதை மீது ஈடுபாடு வந்ததாகப் பின்னாளில் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு மாநில சுயாட்சி, தமிழக எல்லை மீட்புப் போராட்டங்களிலும், பொதுவுடைமை ஆதரவுச் செயல்பாடுகளிலும் இளமையில் ஈடுபட்டிருந்தவர். மரபுக் கவிஞராக எழுதத் தொடங்கியவர், விமர்சகரும் முன்னோடிப் புதுக்கவிஞர்களில் ஒருவருமான க.நா.சு.வின் தாக்கத்தால், மொழி, நாடு, இனம், அமைப்பு என்று எந்தச் சார்புமின்றி, சுதந்திரமாக, உரைநடையில் கவிதைகள் எழுதுவதற்கு உந்தப்பட்டார். கட்சிக் கவிதைகள், தீபாவளி மற்றும் பொங்கல் வாழ்த்துக் கவிதைகளை மட்டுமே கவிதைகள் என்ற பெயரில் வெகுஜன இதழ்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த காலம் அது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ் வாழ்க்கையில் நடந்த சமூக, அரசியல் மாற்றங்களுக்கு ஞானக்கூத்தன் அளவுக்கு துணிச்சலுடன் எதிர்வினை செய்த வேறொரு கவிஞர் இல்லை என்று துணிவுடன் சொல்லலாம். தமிழகத்தின் வெகுஜன அரசியல் போக்குகளாக உருவான திராவிட, காங்கிரஸ் இயக்கங்களின் புதிதாக வடிவெடுத்த அலங்கார மேடைப் பேச்சுகள், வெற்று மொழிப் பெருமிதங்களை விமர்சித்து அவற்றை சமத்காரத்துடனும் துணிச்சலுடனும் தன் கவிதைப் பொருட்களாக்கியிருக்கிறார். அரசியல்வாதிகள் மேடையில் அலங்காரமாகப் பேசும் லட்சியங்கள், கோஷங்கள் வேறு, நோக்கமும் நடைமுறைகளும் வேறு என்ற இன்றைய நிதர்சனத்தை நேற்றே முன்னுணர்ந்த கவிதைகள் அவருடையவை. பாலியல் உள்ளடக்கம் கொண்ட வெற்றுப் பொழுதுபோக்கைத்தான் தமிழக அரசியல் மேடைகள் அன்றும் இன்றும் எளிய மக்களுக்கு அரசியல் என்ற பேரால் தந்துகொண்டிருப்பதை முகத்தில் அறைந்து சொல்பவை அவரது ‘காலவழுவமைதி’ மற்றும் ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’ கவிதைகள்.
ஞானக்கூத்தனின் கவிதைகள் எல்லா லட்சிய பாவங் களையும் துறந்தவை. ஒரு பழைமையான நபரின் குரல் போன்ற தோற்ற பாவம் கூட அவர் கவிதைகளில் உண்டு. இருபதாம் நூற்றாண்டு முற்றிலும் உடைந்துவிட்டது என்றும் தான் ஒரு பழம் பஞ்சாங்கம் என்றும் நேரடியாகவே கூறியிருக்கிறார். அவர் கவிதைகளில் இருபதாம் நூற்றாண்டு கடவுளும் மேஜை நடராஜராகக் குறுகியவர். ஓட்டைக் காலணாவாகவும், அலுவலகத்துக்குச் செல்லும் உயிரியாக மட்டுமே மகத்துவம் குறைந்துவிட்ட மனிதனைப் பற்றி அவருக்குக் கவலை இருந்திருக்கிறது.
ஞானக்கூத்தன் இனவாதச் சார்பு கொண்டவர், மாற்றங்களுக்கு எதிரானவர் என்ற விமர்சனங்களையும் கண்டனங்களையும் அவர் கவிதைகளுக்காக எதிர் கொண்டிருக்கிறார். அந்த விமர்சனங்களையும், அவரது பழந்தன்மையையும் பொருட்படுத்தும் ஒரு வாசகர்கூட அவர் கவிதைகளைப் படித்து, அவரது தரப்பைப் பரிசீலித்து மெல்லிய புன்னகையோடு கடக்க முடியும். மொழி, அரசியல், தாய்மை, பண்பாடு, காதல் என்ற எந்த புனிதத்தன்மையையும் ஏற்காதது ஞானக்கூத்தனின் கவிதைக் குணம். தமிழரின் பண்பாட்டு பொதுக்குணங்கள், அரசியல், குழுக்குறிகள், பேச்சுவழக்கை இவரது கவிதைகள் கொண்டிருப்பினும் அவற்றின் எள்ளலும், விமர்சனமும், அங்கதமும் பொதுக் கலாச்சார ஏற்பில்லாத கவிஞராய் அவரை மாற்றின.
சினிமா, அரசியல், பொழுதுபோக்கு வெகுஜன இதழகள் ஆகிய மூன்று பெரும் சக்திகள் தமிழர்களின் அன்றாட, சமூக, அரசியல் வாழ்வையே ஆதிக்கம் செய்துகொண்டிருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான வாசகர்கள் மட்டுமே படிக்கும் சிற்றிதழ்களின் வழியாக கவிதையை விடுதலை செய்தவர்களில் ஒருவர் ஞானக்கூத்தன். பத்திரிகை வெளியீடும், சிந்தனை இயக்கமும், பிரசுரமும் சாதாரணருக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையில் வெகுஜனக் கருத்தியலுக்கெதிராகத் தொடங்கிய எதிர்ப்பியக்கத்தின் பிரதிநிதி அவர். அப்போது, பெரும் ஊடகங்களை எதிர்த்து அவர் எழுப்பிய குரல் சாதாரணமானதல்ல.
தனிநபர் இயக்கமாக சி.சு. செல்லப்பா என்ற ஒரு எழுத்தாளர் தொடங்கிய எழுத்து, ஞானக்கூத்தன் உள்ளிட்ட கோபக்கார இளைஞர்கள் தொடர்ந்த ‘கசடதபற’ இதழியக்கம் தொடங்கி வைத்த சிற்றிதழ் மரபின் தொடர்ச்சியாக அ.மார்க்ஸ், ரவிக்குமார் ஆகிய நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய ‘நிறப்பிரிகை’ வரை இந்த எதிர்ப்பியக்கத்தின் உயிர்த்துவமான நீட்சிகள். தலித், தலித்தியம் என்றெல்லாம் சில நூறு வாசகர்களுக்கு அறிமுகமான வார்த்தைகள்தான் இன்று தமிழகத்தில் வெகுஜன இயக்கமாகவே மாறியுள்ளன.
தமிழுக்கு அவ்வளவு கொடைகளை அளித்தவர் ஞானக்கூத்தன். ஆனால், அவருக்கு உரிய எந்த மரியாதையையும் தொடர்ந்து வந்த அரசுகளும் நம் சமூகமும் செய்யவில்லை என்பதுதான் துயரம். ‘ஞானபீட விருது’க்கே தகுதியானவர்; ஆனால், ‘சாகித்ய அகாதெமி’ விருதுகூட தமிழகத்துக்கே உரிய அற்பமான குழு அரசியல் தந்திரங்களால் அவருக்கு மறுக்கப்பட்டது.
கருத்தியல், கண்ணோட்டம், விமர்சனங்கள் சார்ந்து பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும் தமிழ்ப் பண்பாட்டையும் உயிர்ப்பியக்கத்தையும் இன்னமும் தக்கவைத்திருந்த ஒரு அறிவுப் பண்பாட்டுக் கட்டுமானத்தில் மிக முக்கியமான இடத்தில் ஞானக்கூத்தன் இருந்தார். அந்தச் செங்கல் சரிந்துவிட்டது!