தலையங்கம்

பொது நன்மைக்குத் துணை நிற்க வேண்டாமா?

செய்திப்பிரிவு

மின்உற்பத்தியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய விரும்புகிறது இந்திய ரயில்வே துறை.

ரயில்வே துறையின் பணிகளை முடிக்க ஏராளமான முதலீடுகள் தேவைப்படுகின்றன. அதன் பயணக் கட்டண, சரக்குக் கட்டண வருவாய் போதுமானதாக இல்லை. மத்திய அரசாலும் அதற்குப் பணம் தர முடியவில்லை. மாநிலங்களும் ரயில்வே திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இந்நிலையில், நிதி திரட்டுவதற்கு முன் செலவுகளைக் குறைப்பதற்கு அளிக்கும் முன்னுரிமை அடிப்படையில், இந்த முடிவை ரயில்வே துறை எடுத்திருக்கிறது.

இந்த முடிவால் மின்சார வாரியங்களுக்கு வருவாய் குறைந்துவிடும் என்று அஞ்சும் ஒடிசா, பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநில அரசுகள் முட்டுக்கட்டை போடுவது துரதிர்ஷ்டவசமானது. ரயில்வே துறை தன்னுடைய பயன்பாட்டுக்காகச் சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.7 என்ற விலையில் வாங்குகிறது. ஆனால், தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள், ஒரு யூனிட் ரூ.3.69 முதல் ரூ.5.5 வரையில் தயாரிப்புச் செலவுக்கேற்ப விற்கின்றன. ரயில்வே நிறுவனம் ரயில்களை ஓட்டுவதற்கான மின்பாதைகளில் மட்டும் 2,100 மெகா வாட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ரயில்வேயின் இதர மின்சாரப் பயன்பாட்டு அளவு 400 மெகா வாட். இப்போது ரயில் பாதை இரட்டிப்புப் பணியும் மின்மயமாக்கல் பணியும் அதிகமாக நடப்பதால், ரயில்வேயின் மின்கட்டணச் செலவு மேலும் கணிசமாக உயர்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இப்போதே ஆண்டுக்கு ரூ.12,000 கோடி மின்கட்டணத்துக்குச் செலவாகிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்கினால், ஆண்டுக்கு ரூ.5,000 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று ரயில்வே மதிப்பிட்டுள்ளது. மாநில மின்சார வாரியங்கள் பயனாளிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் பாதிச் செலவில் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை விற்கத் தயாராக இருக்கின்றன என்பதிலிருந்தே மாநில மின்சார வாரியங்களின் நிர்வாகச் சீர்கேட்டைப் புரிந்துகொள்ளலாம். அரசியல் லாபத்துக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் மின்சார வாரியத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கத் தவறும் மாநில அரசுகள், ரயில்வே துறை நேரடியாக மின்சாரம் வாங்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவதன் மூலம் வளர்ச்சியை முடக்குகின்றன.

ரயில்வே துறை மட்டுமல்ல, ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் மின்சார வாரியத்தின் மூலமாக அல்லாமல் நேரடியாகவே மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய விரும்புகின்றன. பல நிறுவனங்கள் அப்படி வாங்கவும் செய்கின்றன. சில நிறுவனங்கள் சொந்தமாக மின்உற்பத்தி செய்கின்றன. எல்லா மாநில அரசுகளும் மின்உற்பத்தியைப் பெருக்குவதுடன் அதைக் குறைந்த செலவில் தயாரிப்பதற்கும் முன்னுரிமை தர வேண்டும். அரசுத் துறை நிறுவனங்கள் நேரடியாக மின்சாரம் கொள்முதல் செய்வதற்குத் துணை நிற்க வேண்டும். மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான பாதையும், கட்டணம் வசூலித்து அனுமதிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளைப் போல லாபகரமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். மின்வாரியங்களின் அனைத்துப் பிரிவுகளும் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

மாநில அரசுகளின் அக்கறையற்ற போக்கு, ஊழல், மெத்தனமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு சாமானிய நுகர்வோர் பலி கடா ஆக்கப்படக் கூடாது. கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்யும் பெரிய அரசுத் துறை நிறுவனமான ரயில்வே, தன்னுடைய தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும், கிடைக்கும் பணத்தைப் பயனுள்ள வழியில் முதலீடு செய்வதும் பொது நன்மைக்கானவை என்பதை மாநில அரசுகள் மறந்துவிடக் கூடாது!

SCROLL FOR NEXT