தலையங்கம்

இன்னும் எவ்வளவு உயிர்கள் வேண்டும்?

செய்திப்பிரிவு

இந்தியாவில் சாலை விபத்துகளில் ஓராண்டில் இறப்போர் எண்ணிக்கை, கொள்ளைநோய்களுக்குப் பலியாவோரின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. ஏன் நம்முடைய மத்திய - மாநில அரசுகள் இதை ஒரு தேசிய நெருக்கடியாகப் பார்க்கக் கூடாது?

காலத்துக்கு ஒவ்வாத போக்குவரத்து நிர்வாக முறையும் போக்குவரத்துச் சாதனங்களும் 2015-ல் மட்டும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரைப் பலி வாங்கியிருக்கின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சாலையைப் பயன்படுத்துவதற்கு அஞ்சும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதில் அதிகம் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தப் புள்ளிவிவரம் பதிவுசெய்யப்பட்ட விபத்துகளின் கணக்கு. இந்தியாவில் பத்தில் ஒரு பங்குகூட விபத்துகள் பதிவுசெய்யப்படுவதில்லை என்பது நமக்குத் தெரியும்.

சாலையில் செல்வோர் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பும் காயமடைவதற்கான வாய்ப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சாலை விபத்துகள் தொடர்பான புள்ளிவிவரங்களைக் கவனமாக ஆராய்ந்தால், இறப்பவர்களின் எண்ணிக்கை 1970 முதல் தொடர்ந்து 6% அதிகரித்துக்கொண்டே வருவது தெரிகிறது. கடந்த ஆண்டு விபத்தில் இறந்தவர்களில் 50%-க்கும் மேல் 15 வயது முதல் 34 வயது வரையில் உள்ளவர்கள். இது அந்தந்தக் குடும்பங்களுக்கு மட்டும் நேரும் தனிப்பட்ட இழப்பு அல்ல, ஒட்டுமொத்த தேசமும் எதிர்கொள்ளும் இழப்பு.

பொதுவாக, நம்மூரில் விபத்து ஏன் ஏற்பட்டது என்பதை அறிவியல்பூர்வமாக விசாரிக்கும் முகமை ஏதும் இல்லை. சாலைப் பாதுகாப்பு - போக்குவரத்து நிர்வாகம் தொடர்பாக ஆராய்ந்த சுந்தர் குழு, “பாதுகாப்பு வாரியம் ஒன்றை ஏற்படுத்தச் சட்டம் இயற்ற வேண்டும்” என்று பரிந்துரைத்து, 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போதுள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்ட அடிப்படையில் விபத்துகளை விசாரிக்கும் காவலர்கள் ஓட்டுநரின் தவறு என்ன, விபத்துக்கு அவர் எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதை நிர்ணயிப்பதோடு முடிந்துவிடுகிறது. மோசமான சாலை வடிவமைப்பு, போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமை போன்ற இதர காரணங்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார் என்பது வரை விசாரணைகள் நீள்வதில்லை.

இப்போது ‘தேசிய சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து நிர்வாக வாரியம்’என்ற அமைப்பை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது வெறும் ஆலோசனை வாரியமாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே, இது உருவாவதாலும் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. வாகனங்களைத் தணிக்கை செய்து சான்று தருவதிலும், வாகனம் ஓட்ட உரிமம் வழங்குவதிலும், வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் சாலையில் செல்வதற்குத் தயாராக உள்ளனவா என்று சோதனை செய்வதிலும் உள்ள குறைகள், ஊழல்கள் களையப்படாதவரை விபத்துகளைக் குறைக்க முடியாது.

ஒட்டுமொத்த அமைப்புச் சூழலையும் பரிசீலித்துத் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய விவகாரம் இது. இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிக்க சாலைகளைக் கொண்ட ஒரு நாட்டில், இவ்வளவு அதிவேக வாகனங்களின் விற்பனை அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது முக்கிய கேள்வி, விதிமீறல் எந்த முனையில் நடந்தாலும் கடும் நடவடிக்கைகள் அவசியம். இப்போதுள்ள நிலையே தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாம் பலிகொடுக்கும் உயிர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்கின்றன ஆய்வுகள். இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க ஆட்சியாளர்கள் காத்திருக்கின்றனர்?

SCROLL FOR NEXT