அகவை 94-ல் அடியெடுத்துவைக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இது, அவருடைய சட்ட மன்ற அனுபவத்தில் வைர விழா ஆண்டு. கருணாநிதியின் இந்த 60 ஆண்டு கால சட்ட மன்ற வரலாற்றில், உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் என்று அவர் பல நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். வாய்ப்பிருந்தபோதும்கூடப் பல அரசியல் தலைவர்களையும்போல எந்தக் காலகட்டத்திலும் அவர் டெல்லி நோக்கிச் செல்லவில்லை. விளைவாக, இந்திய அரசியல் வரலாற்றில் பல அரசியல் கட்சிகளுக்கே இல்லாத வரலாற்றை அவர் படைத்திருக்கிறார். உலகச் சாதனையாகக்கூட இது இருக்கக் கூடும், எந்த நாட்டில் இப்படி ஒரு தலைவர் மக்களால் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்! ஆனால், ஒரு கருணாநிதியின் தனிப்பட்ட சாதனையாக மட்டும் அல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பெருமிதங்களில் ஒன்றாகவும் தன் அரசியல் வாழ்வை அவர் வளர்த்தெடுத்திருக்கிறார் என்பதிலேயே அவருடைய பெருமை இருக்கிறது.
எல்லா அரசியல் தலைவர்களையும்போல அவர் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உண்டு; விமர்சனங்கள் உண்டு. 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்ட மன்றத்துக்குச் செல்கிறார்; அரை நூற்றாண்டு நெருங்கும் நிலையில் தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடிக்கிறார் என்பதைக்கூட ஜனநாயகத்தின் சாதனை என்று கருதத்தக்க அதே அளவுக்கு ஜனநாயகத்துக்கான சோதனை என்றும் கருத முடியும். ஆனால், எல்லாவற்றையும் தாண்டியும், சாதியப் புதைக்குழி மேல் அமைந்திருக்கும் இந்திய அரசியல் மேடையில் மிக அரிதான சாதனை கருணாநிதியினுடையது.
சமூகரீதியாக எண்ணிக்கை அளவிலும் மிகச் சிறுபான்மையான ஒரு சமூகத்திலிருந்து, அதுவும் சாதிய அடுக்குகளில் கீழே இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து உடைத்துப் பீறீட்டு எழுந்த பெருநட்சத்திரம் அவர். தமிழகத்தில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மதவாதச் சக்திகள் தலை தூக்காமல் பார்த்துக்கொண்டதில் அவருக்கு காத்திரமான பங்கு இருக்கிறது! சமூகநீதி வளர்த்தெடுக்கப்பட்டதிலும் தன்னுடைய மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கிறார். கருணாநிதியின் அரசியல் வாழ்வை இவற்றினூடாகவே நாம் பார்க்க வேண்டும்.
ஒரு முதலமைச்சராக கை ரிக் ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களை அவர் அறிமுகப்படுத்தினார். கண்ணொளித் திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள், இலவச கண்ணாடிகள் வழங்கினார். பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளர்களின் மறுவாழ்வுக்கு தனி இல்லங்களை உருவாக்கினார். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித்தரும் திட்டத்தைப் பெருமளவுக்குக் கொண்டுசென்றார். அனைத்துக் கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதிகளைச் செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினார். மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணச் சலுகையை வழங்கினார். அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அரசு ஊழியர் பணிப் பதிவேட்டில் ரகசியப் பதிவுமுறையை ஒழித்தார். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்குத் தனித்தனித் துறைகளை உருவாக்கினார். ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். சமத்துவபுரம் என்ற அனைத்து சாதி மக்கள் குடியிருப்பை ஏற்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை அதிகப்படுத்தினார். கல்வி உதவித்தொகையை உயர்த்தினார். ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மொழிப் போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினார். குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்பதைச் சட்டமாக்கினார். மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்தார். அரசுப் பணியில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்தார். கல்வித் துறையில் சமச்சீர்ப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் அவர் பல திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்.
முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகளைப் போலவே எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய பணிகளும் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டியவை. ஜனநாயக அரசியலமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான முக்கியப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டவர் அவர். அதன் காரணமாகவே அவர் முதல்வர் பதவி வகித்த காலங்களில், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு உரிய வாய்ப்புகளை வழங்கினார். அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதை விரும்பினார். சட்ட மன்ற விவாதங்களைத் தனது பேச்சாற்றலாலும் இலக்கிய ரசனையாலும் அரசியலில் எதிர்த்தரப்பினரும் விவாதங்களைக் கேட்டு ரசிக்கும்படியானதாக அவர் உருமாற்றினார்.
இந்திய அரசியலமைப்பு வலுவான மைய அரசுக்கு வழிசெய்திருக்கும் நிலையிலும் மாநில உரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி அவற்றைப் பெற முயற்சித்தவர் கருணாநிதி. குடியரசு தினம், சுதந்திர தினம் என்று இரண்டு நாட்களிலும் மாநில ஆளுநர்களே கொடியேற்ற வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, முதன்முதலாக மாநில முதல்வர் சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் வழக்கத்தைத் தொடங்கிவைத்தவர் அவர். அண்ணா ‘ஸ்டேட் ஆப் மெட்ராஸ்’ என்றிருந்த தமிழ் நிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றினார் என்றால், அண்ணாவின் வழிவந்த கருணாநிதி, தலைநகரின் ‘மெட்ராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என்றாக்கினார். காலனியாதிக்கத்தின் அடையாள அழிப்பு என்று பேசப்படும் நுண்ணரசியலை அவர் அரசியல் தளத்திலேயே நடைமுறைப்படுத்தினார். மும்பை, கொல்கத்தா என்று இந்தியாவின் மற்ற மாநகரங்கள் பெயர் மாற்றம் பெறுவதற்கு அதுவே முன்னோடியானது. மாநிலச் சுயாட்சிக்கான உறுதியான குரல்களில் ஒன்றாகக் காலம் முழுவதும் அவர் குரல் ஒலித்திருக்கிறது.
கருணாநிதியின் 60 ஆண்டு சட்ட மன்ற வாழ்க்கை இந்தியாவின் உயிர்நாடியான பன்மைத்துவத்தைப் பாதுகாக்க முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அவரது சேவையை அவரது கட்சியினரும், தமிழக மக்களும் நினைவுகூர்ந்து கொண்டாடும் இந்தத் தருணத்தில் ‘தி இந்து’வும் அதில் கைகோத்து உவகை கொள்கிறது.