சுமார் ஐந்து ஆண்டுகளாக நீடித்த ஒரு பரபரப்பான வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆருஷியைக் கொன்றது அவரது பெற்றோர்தான் எனத் தீர்ப்பு அளித்திருக்கிறது சி.பி.ஐ. நீதிமன்றம். 14 வயது ஆருஷிக்கு அவரது வீட்டில் வேலைபார்த்த ஹேமராஜுடன் தொடர்பு இருந்ததை அறிந்த பெற்றோர், கோபத்தில் இருவரையும் கொன்றுவிட்டதாகச் சொன்ன சி.பி.ஐ. தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் முடிந்துபோனாலும் ஆருஷி கொலை வழக்கில் பல கேள்விகள் இன்னமும் தொக்கிநிற்கின்றன. வழக்கின் ஒட்டு மொத்தப் பரபரப்புக்கும் காரணம், ஆருஷி என்கிற 14 வயதுப் பெண்ணுக்கு இருந்ததாகச் சொல்லப்பட்ட ‘உறவு’தான். அதன் அடிப்படையில்தான் ஒட்டுமொத்த வழக்கையும் நகர்த்திச் சென்றது சி.பி.ஐ,. ஆனால், அதற்கான தரவுகள் எதுவும் சி.பி.ஐ-யிடம் இல்லை. அவர்களுக்கிடையில் உறவு இருந்ததற்கான எந்த சாட்சியையும் சி.பி.ஐ. முன்னிறுத்தவில்லை. ஆருஷியின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள், வீட்டருகில் வசிப்பவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் என யாரும் ஆருஷி அப்படியொரு உறவில் இருந்ததாக சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் தரவில்லை. ஆருஷிக்கும் ஹேமராஜுக்கும் ‘உறவு’ இருந்ததற்கான கண்ணால் பார்த்த சாட்சி எதுவும் சி.பி.ஐ-யின் வசம் இல்லை. இதைத் தவிர, முக்கியமான தரவுகள் பலவற்றை சி.பி.ஐ. உரிய முறையில் ஆராயவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சூழ்நிலைக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு வழக்கை நடத்தியது சி.பி.ஐ.
ஊடகங்களைப் பொறுத்தவரையில் இந்த வழக்கின் பரபரப்புக்கு அடிப்படையே ஆருஷி - ஹேமராஜுக்கு இடையில் இருந்ததாக நம்பப்பட்ட உறவுதான். இந்தப் பரபரப்பிலிருந்து வழக்கை விடுவிக்கும் எந்தவொரு செய்திக்கும் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை. நடந்தது என்ன என்பது சம்பவத்தில் தொடர்புடையோரைத் தவிர, பிறருக்கு உறுதியாகத் தெரியாத நிலையில், இதுதான் நடந்திருக்கிறது என்று ஒரு பின்னணி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது பின்னணியல்ல… அதுதான் உண்மை என்று நம்பும் அளவுக்கு ஒட்டுமொத்த நாடும் அந்த ‘உண்மை’யை நோக்கித் தள்ளப்படுகிறது. ஏனெனில், அதுதான் நம் பரபரப்புணர்வுக்குத் தீனி போடுகிறது.
ஆருஷியைப் பற்றியும் ஆருஷி போன்ற இளம் பெண்களைப் பற்றியும் தொடர்ந்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களுக்கு எந்த விதத்திலும் விதிவிலக்காக இல்லை, சி.பி.ஐ. வழக்கை நடத்திய விதம். ஆருஷி கொலையான பிறகு நடந்த பெரும்பாலான விவாதங்கள் அவரைப் போன்ற நகர்ப்புறப் பெண்களின் நடவடிக்கைகள் சார்ந்ததாகவும் இருந்ததை மறந்துவிட முடியாது. பெண்கள் தொடர்பான குற்றங்கள் அல்லது பிரச்சினைகள் செய்தியாகும்போது, அவை ஊடகங்களாலும் பிற சமூக அமைப்புகளாலும் போதிய நுண்ணுணர்வுடன் கையாளப்படுவதில்லை என்பதற்கு ஆருஷி போன்ற நிறைய உதாரணங்கள் நம் முன்னே இருக்கின்றன.
பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதென்பது, உண்மையைக் கண்டறிவதைவிட முக்கியமானது. அப்படியெனில், இது போன்ற விவகாரங்களில் நமது பொறுப்புணர்வு எந்த அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது என்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.