‘‘சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட இந்திய நேரத்தைவிட, ஒரு மணி நேரம் அதிகம் இருக்குமாறு அசாமில் உள்ளூர் கடிகாரங்களில் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, தனி நேர மண்டலம் உருவாக்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் தருண் கோகோய்.
அசாமில் கோடைக் காலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய உதயம் ஏற்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் நன்கு இருட்டிவிடுகிறது. அசாமிலிருந்து 2,900 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத்தில், அசாமில் சூரிய உதயம் ஏற்பட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் சூரியன் உதயமாகிறது.
இந்தியாவின் கால அளவு உத்தரப் பிரதேசத்தின் மீர்சாபூர் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி தீர்க்க ரேகையை அடிப்படையாகக்கொண்டே கணிக்கப்படுகிறது. இந்தக் கோட்டுக்குக் கிழக்கே உள்ள மாநிலங்களுக்கு, மேற்கே உள்ள மாநிலங்களைவிட மிகக் குறைவான பகல் பொழுதே கிடைக்கிறது.
பகல் பொழுதை வீணாக்காமல் இருக்க பிரிட்டிஷார் 150 ஆண்டு களுக்கு முன் ‘சாய் பகான்’ எனும் காலமுறையைக் கடைப்பிடித்தனர். அதை அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமல்படுத்தினர். அதனால், தொழிலாளர்கள் சூரிய உதயத்துக்கு ஏற்ப அதிகாலையிலேயே எழுந்து, வீட்டில் வேலையை முடித்துவிட்டு, தோட்ட வேலைக்கு வந்துவிடுவர். இதனால், அவர்களுடைய உழைப்பு நேரமும் உற்பத்தித் திறனும் இன்றளவும் வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
இந்தியா மிகவும் பரந்துவிரிந்த தேசமாக இருப்பதால், இங்கு சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரே நேரத்தில் எல்லா மாநிலங்களிலும் நடப்பதில்லை. பொதுவான நேர நிர்ணயத்தால் சிற்சில சங்கடங்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
ரஷ்யாவில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டபோது, அங்கே அடுத்தடுத்து இருந்த நிலப்பரப்புகளில்கூட வெவ்வேறு நேரங்களில் சூரிய உதயம் ஏற்பட்டதால், அந்த நாட்டை ஒன்பது காலப் பகுதிகளாகப் பிரித்தார்கள். இதனால், நன்மையைவிடக் குழப்பங்கள்தான் அதிகரித்தன. உதாரணமாக, ஒரு பயணி ரயிலிலோ பஸ்ஸிலோ நெடுந்தொலைவு பயணிக்க நேர்ந்தால், அவருடைய கடிகாரத்தை அடிக்கடி சரிசெய்துகொண்டே போனால்தான் உள்ளூர் நேரத்துக்கும் அவருடைய கைக்கடிகாரத்துக்கும் பொருந்தும்.
இந்தியாவில் நேர மாற்றக் கோரிக்கைகள் நீண்ட காலமாகத் தொடர்ந்தாலும், நிர்வாகச் சிக்கல்களைக் காரணம் காட்டி, இதுவரை மௌனம் சாதித்தது மத்திய அரசு. இப்போது அசாம் தன் நேரத்தை மாற்ற முனையும் தருணத்தில், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களுக்காகவும் பொதுவான கால நேரத்தை மீண்டும் மாற்றி அமைப்பதைப் பற்றி மத்திய அரசு யோசிக்கலாம். மேற்கு வங்கம் - அசாம் எல்லைக்கு அருகில் உள்ள - 90 டிகிரி தீர்க்க ரேகையை ஆதாரமாகக் கொண்டு இந்தியப் பொது நேரத்தை அரை மணி நேரம் கூட்டலாம். அசாமின் பிரச்சினையை ஓரளவு தீர்ப்பதோடு, நாடு முழுவதற்கும் நேர நிர்ணயத்தில் சீர்மையைக் கொண்டுவரவும் இது உதவும். சுமார் ஒரு மணி நேர சூரிய ஒளிநேரம் கூடுதலாகக் கிடைக்கும். அது எரிசக்தி சேமிப்புக்கும் வழிவகுக்கும்!