தலையங்கம்

உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?

செய்திப்பிரிவு

அதிரவைக்கிறது தருமபுரி குழந்தைகளின் தொடர் மரணம். ஒரு மருத்துவமனையில் 2 நாட்களில் 13 குழந்தைகள் மரணம் அடைந்திருக்கும் செய்தி தரும் அதிர்ச்சியை மேலும் வலி மிகுந்ததாக்குகிறது, ஒவ்வொரு மாதமும் 45 - 60 சிசுக்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் மட்டும் இறப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. கேட்பவர் எவரும் கொதிப்படைகிறார்கள், தமிழகச் சுகாதாரத் துறையைத் தவிர! நம் நாட்டில் ஏழைகளின் உயிருக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்தான் இந்தச் சம்பவங்கள்.

மருத்துவமனையில் சிகிச்சையும், கட்டமைப்பும் மிகவும் தரமாக இருப்பதாகவும், இறந்த குழந்தைகளெல்லாம் மிகவும் ஆபத்தான நிலையில் இந்த மருத்துவமனைக்கு வந்தவர்கள் என்றும் அரசுத் தரப்பிலும் மருத்துவமனை தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களோ வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள். மருத்துவர்கள் போதிய அக்கறை காட்டாததால்தான் குழந்தைகள் இறந்ததாக அந்தக் குழந்தைகளின் உறவினர்களும் பொதுமக்களும் புகார் செய்திருக் கிறார்கள்.

பச்சிளங்குழந்தைகள் பிரிவு மிக மோசமான முறையில் நடத்தப்படுவதாகவே தெரிகிறது. உதாரணமாக, கதகதப்பு உண்டாக்கும் சாதனத்தில் (வார்மர்) ஒரு குழந்தையை மட்டுமே படுக்கவைக்க வேண்டும். ஆனால் மூன்று, நான்கு குழந்தைகளைப் படுக்கவைப்பதே இங்கு வழக்கம் என்கிறார்கள் மக்கள். இப்படி அருகருகே சிசுக்களைப் படுக்க வைக்கும்போது, சிசுக்கள் உதைத்துக்கொள்ளும்போதெல்லாம், பக்கத்தில் நெருக்கிப் படுக்கவைக்கப்பட்டிருக்கும் சிசுக்களுக்குப் பொருத்தப்பட்டிருக்கும் சலைன் குழாய்கள் பிடுங்கிக்கொண்டு, ரத்தக் கசிவு ஏற்பட்ட சம்பவங்களையெல்லாம் மக்கள் கூறுகிறார்கள். தொடர் மரணங்களுக்குப் பிறகு, இந்த மருத்துவமனை மீது விழுந்த ஊடகக் கவனம் காரணமாக, தற்போது ஒவ்வொரு கதகதப்பூட்டிக்கும் ஒரு குழந்தை என்று வைத்துக் கண்துடைப்பு செய்யப்பட்டிருப்பதையும் மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கேட்கும்போதே மனம் பதறுகிறது. ஆனால், சுகாதாரத் துறை யினருக்கோ துளியும் மனசாட்சி இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனை குழந்தைகளின் உயிர்களும் கொஞ்சமும் அவர்களை உலுக்கியதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் தரப்பிலிருந்து வரும் பதில்கள் சப்பைக்கட்டுகளாகவே இருக்கின்றன.

தருமபுரி மக்கள் சுட்டிக்காட்டும் இரு விஷயங்கள் தருமபுரியைத் தாண்டியும் அரசு மருத்துவமனைகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்

களாக இருப்பவை. 1. மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள் போது மான அளவில் இல்லை. 2. இருக்கும் மருத்துவர்களும் தங்கள் சொந்த மருத்துவ நிலையங்கள் மீது காட்டும் அக்கறையை அரசு மருத்துவமனையின் மீது காட்டுவதில்லை.

மனசாட்சியுள்ள எந்த மருத்துவரும், சுகாதாரத் துறை அதிகாரியும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது.

இந்தியாவின் ஏழை மக்கள் எண்ணிக்கை 80 கோடிக்கும் மேலே. இவ்வளவு பெரிய மக்கள்தொகையின் உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் பொறுப்பு அரசு. அந்தப் பொறுப்பை அடித்தளமாகக் கொண்டே அரசு மருத்துவமனைகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பைப் பற்றிய பிரக்ஞை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் எந்த அளவுக்கு இருக்கிறது? தயவுசெய்து பதிலை வார்த்தைகளில் அளிக்காதீர்கள்; உங்கள் கடமைகளில் காட்டுங்கள்!

SCROLL FOR NEXT