எப்பேர்ப்பட்ட ஓர் உந்துசக்தி இது!
ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு மட்டும் அல்ல, மனிதாபிமானம் பேணும் எவரையும் கொண்டாடவைக்கக் கூடியது.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நீதித் துறையில் மனிதாபிமானப் பார்வையைச் செலுத்தி, முற்போக்கான ஒரு தீர்ப்பை அளித்திருப்பதற்காக உச்ச நீதிமன்றத்தையும் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்திய நீதித் துறையின் எல்லைகள் விரிவடைவதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. கூடவே, அரசியல்வாதிகளின் அளவற்ற அக்கறையின்மையால் அவநம்பிக்கைக்கு உள்ளாகும் சாமானியர்களுக்குப் பெரும் ஆறுதலையும் இந்தத் தீர்ப்பு அளிக்கிறது.
உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்போடு தன்னுடைய எல்லைக்கு உட்பட்டு நின்று, “மாநில அரசு இவர்களை விடுவிக்கலாம்” என்று தீர்ப்பு அளித்திருப்பது கண்ணியத்துக்கு உதாரணம் என்றால், தீர்ப்பு வந்த மறுநாளே, இந்த வழக்கில் தொடர்புடைய மேற்கண்ட மூவர் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கத் தமிழக அரசு முடிவுசெய்திருப்பது மாண்புக்கான உதாரணம்.
ராஜீவ் வழக்கு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடையது. எனினும், கருணை மனு தொடர்பாக முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் காட்டப்பட்டதைக் காரணம் காட்டி, கடந்த மாதம் 14 பேருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியிருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும்போது, உச்ச நீதிமன்றம் தற்போது வேறு விதமான தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது. எனவே, அந்தத் தீர்ப்பே தற்போதைய தீர்ப்புக்கும் எதிர்காலத்தில் வழங்கவிருக்கும் தீர்ப்புகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறது.
அதேசமயம், மரண தண்டனைக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க நெடிய பயணத்தில் இதுவும் ஒரு முக்கியமான மைல் கல். முக்கியமாக, இந்தத் தீர்ப்பு உள்ளடக்கியிருக்கும் இந்தச் செய்தி போற்றுதலுக்குரியது: குற்றவாளிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்ற மனப்போக்கில், இனி அரசோ நீதித் துறையோ மக்களோ இருந்துவிட முடியாது.
இந்தச் சூழ்நிலையில், மரண தண்டனைக்கு ஆதரவான குரல்கள் பழையபடி ஒரு கேள்வியை முன்வைக்கின்றன: “அப்படியென்றால், குற்றத்தால் பலியானவர்களுக்கான நீதிதான் என்ன?”
நியாயமான கேள்விதான் இது. கடுமையான குற்றங்களை இழைத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்தான். இந்த விஷயத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்கிறது. “ஆயுள் தண்டனையின் கால வரையறை என்பது ஒருவருடைய ஆயுள் முழுவதும்தான்” என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
கூடவே, “ஆயுள் தண்டனையின் கால அளவைக் குறைப்பதும் குற்றவாளிகளை விடுவிப்பதும் மாநில அரசின் உரிமைகளுக்கு உட்பட்டது” என்று தெரிவித்திருப்பதன் மூலம், கொடும் குற்றவாளிகளையும், திருந்தும் குற்றவாளிகளையும் சமூகம் என்ன செய்யலாம் என்பதற்கான தெளிவான பாதையை நீதிமன்றம் காட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பந்து இப்போது அரசின் பக்கம்; மரண தண்டனையை ஒழித்துக்கட்ட இனியும் யோசிக்க வேண்டுமா?