ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்திருப்பது கவலை தருகிறது.
துருக்கியில் அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக, ஏப்ரல் 16-ல் பொது வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதில் அதிபர் எர்டோகனுக்கு ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கின்ற துருக்கியர்களின் ஆதரவையும் திரட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஜெர்மனியின் சில நகரங்களும், பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்தும், உள்நாட்டு அரசியலில் தாக்கம் செலுத்தலாம் என்று கருதியும் இந்தக் கூட்டங்களுக்குத் தடை விதித்தன. இந்தப் பிரச்சினையைத் துருக்கிக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான மோதலாகக் கட்டமைத்துவருகிறார் எர்டோகன். கூட்டங்களுக்கு ஜெர்மனி தடை விதித்தவுடன், அந்நாடு ‘நாஜி’வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட்டினார். எர்டோகனுக்கு ஆதரவு திரட்டும் கூட்டம் ஒன்றில் உரையாற்ற நெதர்லாந்து சென்ற துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவ்சோக்லு பயணம் செய்த விமானம் தரை இறங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்ததால், அந்நாட்டையும் பாசிஸ நாடு என்றும் நாஜி ஆட்சியின் மிச்சம் என்றும் விமர்சித்தார் எர்டோகன். இதையடுத்து, நெதர்லாந்துக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையில் கடந்த ஆண்டு கையெழுத்தான முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை ரத்துசெய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறது துருக்கி அரசு.
எர்டோகனைப் பொறுத்தவரை, தனக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு மிக முக்கியமானது. பெரும்பான்மையான மக்கள் இந்த அரசியல் சட்டச் சீர்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டால், அதிபர் தலைமையிலான ஆட்சி முறை துருக்கியில் அமல்படுத்தப்படும். அப்படி நடந்துவிட்டால், தனக்கான அமைச்சரவையைத் தானே அவரால் வடிவமைக்க முடியும். அதன் பின்னர், இரண்டு முறை ஐந்தாண்டு கால ஆட்சியை, தேர்தலோ எதிர்ப்போ இல்லாமல் அவரால் நடத்த முடியும். எர்டோகனின் முயற்சிகள் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் எதிர்ப்பு, தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குத்தான் வலு சேர்க்கும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இருதரப்பும் நிதானமாக அணுகியிருந்தால் இந்த விஷயம் ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் முடிந்திருக்கும். ஆனால், துருக்கிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நீண்ட கால உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை இது உருவாக்கிவிட்டது.
நாளுக்கு நாள் நாடுகள் இடையிலான உறவுகள் பெருகி, மக்களின் மன எல்லைகள் சுருங்குவதற்குப் பதிலாக, குறுகிய காலப் பலன்களுக்காக மக்களிடையே உணர்வுகளைத் தூண்டிவிட்டு, தொலைநோக்குப் பார்வையை அரசியல்வாதிகள் குலைப்பது உலகெங்கும் ஒரு போக்காகவே உருவெடுத்துவருகிறது. இந்தப் போக்கும் பரவும் கசப்பும் பெரும் கவலை அடையச் செய்கின்றன.