தலையங்கம்

உப்பு உற்பத்தி உயர உதவுவோம்

செய்திப்பிரிவு

உணவின் அறுசுவைகளில் முக்கிய இடம்பிடிப்பது உப்பு. அந்த உப்பு தயாரிக்கும் தொழில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. உலகிலேயே உப்பு உற்பத்தியில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடம் இந்தியாதான்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது நம்முடைய மொத்த உப்பு உற்பத்தி ஆண்டுக்கு 19 லட்சம் டன்கள்தான். இப்போது சராசரியாக 220 லட்சம் டன்கள். நாடு முழுக்க 6.09 லட்சம் ஏக்கரில் உப்பு உற்பத்தியாகிறது. 11,799 உற்பத்தியாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 10 ஏக்கருக்கும் குறைவான பரப்பில் உப்பு தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை 87.6%.

உப்புத் தொழில் பொது அதிகாரப் பட்டியலில் வருகிறது. எனவே, மத்திய அரசுதான் இதற்கு முழுப் பொறுப்பு. ‘உப்பு ஆணையர்’ என்கிற உயர் அதிகாரியின் நேரடிக் கண்காணிப்பில் இந்தத் துறை செயல்படுகிறது. மத்திய அரசு உப்புமீது உற்பத்தி வரி ஏதும் விதிப்ப தில்லை. உப்பு காய்ச்சுவதற்கான நிலங்களை மத்திய அரசுதான் குத்தகை அடிப்படையில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்கிவருகிறது.

உப்பிலிருந்துதான் காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், குளோரின் தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுதோறும் 59 லட்சம் டன் உப்பு நேரடியாக உண்ணப்படுகிறது. தொழில்துறை பயன்பாட்டுக்கு 107 லட்சம் டன் அளிக்கப்படுகிறது. சுமார் 35 லட்சம் டன் ஏற்றுமதியாகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்பு உற்பத்தியில் ஈடுபடும் தமிழ்நாடு, ஆந்திர உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் சமீபத்திய ஆணையால் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள். உப்பு காய்ச்சும் நிலங்களின் தரை வாடகை ஆண்டுக்கு ஏக்கருக்கு ஐந்து ரூபாய் என்று வசூலிக்கப்பட்டது, 120 ரூபாயாக - ஒரேயடியாக - உயர்த்தப்பட்டு விட்டது.

குத்தகை வாடகையாக ஆண்டுக்கு ஒரு டன்னுக்கு 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுவதாக சமீபத்திய சுற்றறிக்கை தெரிவிக்கிறது. அது, இதுவரை 10 ரூபாயாக இருந்தது. அத்துடன் இந்த வாடகையை இந்த ஆண்டு ஜனவரி முதலே கணக்கிட்டு மொத்தமாக வசூலிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. இப்போதைய குத்தகை முடிந்த பிறகு, இந்த நிலங்கள் ஏல அடிப்படையில், அதிக ஏலம் கோருவோருக்குத் தரப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. இது உற்பத்தியாளர்களுக்குப் பேரிடியாக இருக்கிறது.

உப்பு காய்ச்சுவதற்காக ஒதுக்கியுள்ள நிலங்களில் அப்படியே கடல்நீரைத் தேக்கி உப்பு தயாரித்துவிட முடியாது. அதற்கு ஏராளமான அடித்தளக் கட்டமைப்பு வசதிகளைச் செய்ய வேண்டும். அவற்றை இந்தச் சிறு உற்பத்தியாளர்கள் செய்திருக்கின்றனர். நாளை இந்த உப்புத்தொழிலைவிட்டு வெளியேற நேர்ந்தால், வாழ்வாதாரத்தை இழப்பதுடன் அவர்கள் செய்த இந்த முதலீடுகள் வீணாகிவிடும். இவர்களில் பெரும்பாலோர் - கிட்டத்தட்ட அனைவருமே - மூன்றாவது தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்கின்றனர்.

நம் நாட்டில் உப்பு உற்பத்தி ஒரு ஹெக்டேரில் வெறும் 100 டன்களாகத்தான் இருக்கிறது. அதை 300 டன்கள்வரை உயர்த்தலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உற்பத்தியாளர்களும் அரசும் முக்கியத்துவம் தர வேண்டும். வாடகை உயர்வு மூலம் பெற நினைக்கும் வருவாயை, உற்பத்தி அதிகரிப்பின் மூலம் பெற அரசு முயல வேண்டும்.

SCROLL FOR NEXT