தலையங்கம்

நீராவுக்கு அனுமதி: பாராட்டுக்குரிய முடிவு

செய்திப்பிரிவு

தென்னை விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைக்குத் தமிழக அரசு செவிசாய்த்துள்ளது. தென்னையிலிருந்து நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது.

தென்னம்பாளையிலிருந்து இறக்கப்படும் நீர் நொதிப்புத் தன்மை அடைந்தால் போதை அளிக்கக்கூடிய கள் ஆகிறது. ஆனால், தென்னை வளர்ச்சி வாரியத்தால் கண்டறியப்பட்டுள்ள நொதிப்பு எதிர்ப்பு திரவத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நீரா பானம் புளிப்புத் தன்மையை அடையாது. இப்பானம், இயற்கையான சுவை மாறாமல் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இதைப் பயன்படுத்தி இனிப்பு வகைகளையும் தயாரிக்கலாம். நீரா பானம், ஆல்கஹால் இல்லாத இனிப்புச் சுவையுடைய ஊட்டச் சத்து பானமாகும். வைட்டமின் ஏ,பி,சி ஆகிய உயிர்ச் சத்துக்களுடன் உடல் வளர்ச்சிக்குத் தேவையான தாது உப்புகளும் அடங்கியுள்ளன.

தமிழகத் தென்னை விவசாயிகள் போதுமான அளவு உற்பத்தி இருந்தும்கூட சந்தையில் தேங்காய்களுக்குச் சரியான விலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால், தென்னையிலிருந்து கள் மற்றும் நீரா இறக்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில், தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மதிப்புக் கூட்டுப் பொருள் என்ற வகையில் விவசாயிகளுக்குப் பயனளிக்கக்கூடிய விஷயம் இது.

விவசாயிகளுக்கு ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு ரூ. 1,000 வருமானம் கிடைக்கிறது. ஆனால், நீரா பானம் இறக்கினால், மரம் ஒன்றுக்கு ரூ.15,000 வரை வருமானம் பெற முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் ஏற்கெனவே பெற்ற வருமானத்தைக் காட்டிலும், இந்த அனுமதியால் நிச்சயமாக அதிக வருமானம் பெற வாய்ப்பு இருக்கிறது. 1.50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீரா தயாரிப்புக்கு விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டமும் வரவேற்கத்தக்கது. நீரா உற்பத்தியையும் சந்தைப்படுத்தலையும் முறைப்படுத்த அரசு தெளிவாகத் திட்டமிருப்பதாகத் தெரிகிறது. தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் ஆகியவற்றின் மூலமாகவே நொதிப்பு எதிர்ப்புத் திரவம் விநியோகிக்கப்படும். கடந்த ஆண்டு கர்நாடக அமைச்சரவையால் நீரா பானம் இறக்க அனுமதி வழங்கப்பட்டபோதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. மகாராஷ்டிரத்தில் நீரா பானங்களுக்குத் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு வழங்கும் தரச்சான்றிதழ் முத்திரையோடுதான் நீரா பானத்தை அங்கு விற்பனை செய்ய முடியும். மகாராஷ்டிர நடைமுறையையும் தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

SCROLL FOR NEXT