தலையங்கம்

ரத்த வேட்டைக்கு முடிவுகட்டுங்கள்!

செய்திப்பிரிவு

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். எப்படிப்பட்ட காலத்தை துருக்கி கடந்துகொண்டிருக்கிறது என்பதை இத்தாக்குதல் காட்டுகிறது. சிரியாவுக்குச் செல்லும் ஜிகாதிகள் கடக்கும் தெற்கு எல்லைக்கு அருகில் இடைநிலை முனையமாகத் திகழ்கிறது இஸ்தான்புல். நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு எல்லையில் குர்து போராளிகளுடன் அரசுப் படை சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இஸ்தான்புல் நகரில் நடந்திருப்பது இந்த ஆண்டின் நான்காவது பயங்கரவாதத் தாக்குதல். துருக்கி அரசும் மேற்கத்திய நிபுணர்களும் ‘இஸ்லாமிய அரசு’ என்ற ஐஎஸ் அமைப்பின் வேலைதான் இது என்று கூறுகின்றனர். அப்படியானால், இது துருக்கி அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவுதான். காரணம், அதிபர் ரெகப் தய்யீப் எர்டோகனின் சிரியா கொள்கையால், மேற்கு ஆசியாவில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சிரியா நாட்டின் அதிபர் பதவியிலிருந்து அதிபர் பஷார் அல்-அஸ்ஸாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எர்டோகன் வலியுறுத்தினார். அஸ்ஸாதின் எதிர்ப்பாளர்களான சவுதி அரேபியா, கத்தார் ஆகியவற்றுடன் துருக்கியும் கைகோத்துள்ளது. சிரியாவுடன் தனக்குள்ள 800 கி.மீ. நெடு எல்லையை, உலகெங்கிலும் இருந்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்து சிரியாவுக்குள் செல்லட்டும் என்பதற்காகக் திறந்துவைத்திருக்கிறது துருக்கி. சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் ஓயாமல் நடப்பதற்கு இந்த எல்லை திறந்துகிடப்பதும் முக்கியக் காரணம். ஐஎஸ் அமைப்புக்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் வெளிநாட்டு ஜிகாதிகள் கிடைப்பதற்கு இது உதவுகிறது.

குறுகிய கால ஆதாயத்துக்காக, ஐஎஸ் தீவிரவாதிகளைத் தன் நாட்டு எல்லை வழியாகச் செல்ல அனுமதிப்பது, நீண்ட கால நோக்கில் ஆபத்தாகிவிடும் என்பதைத் துருக்கி முன்னர் உணரவில்லை. மேற்கத்திய நாடுகளின் இடைவிடாத அறிவுரை காரணமாக அக்கொள்கையை துருக்கி மாற்றத் தொடங்கிய பிறகு, ஐஎஸ் அமைப்பு துருக்கியையே இப்போது தாக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு சுருக் மற்றும் அங்காரா என்ற துருக்கிய நகரங்களில் கூடிய இடதுசாரிகள் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ், இப்போது இஸ்தான்புல் நகரை இலக்காக வைத்துத் தாக்கியிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இறுதிவரை மேற்கொள்வோம் என்று எர்டோகன் இப்போது அறிவித்திருக்கிறார். இதில் அவருடைய வியூகம் என்ன? துருக்கிக்கு இப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் வரவிருக்கும் ஆபத்துகள், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் தொடர்பானவைதான். எர்டோகன் ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ அஸ்ஸாதின் காலத்துக்குப் பிறகு, சிரியாவில் தனக்கு செல்வாக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தது நிராசையாகப் போய்விட்டது. அவர் தன்னை முற்றாக மாற்றிக்கொள்வது சிரியாவுக்கும் நல்லது, துருக்கிக்கும் நல்லது.

பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைத் தடுக்க தனக்கும் சிரியாவுக்கும் இடையிலான எல்லையை மூடுவதுடன், பயங்கரவாதிகள் கடக்க முடியாமல் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதும் துருக்கி எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகளாகும். அஸ்ஸாதுக்கு எதிரான மறைமுகப் போரை நிறுத்திக்கொண்டு, சிரியாவில் அரசுக்கும் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் அனைத்துலக நாடுகளின் முயற்சிகளுக்கு உறுதுணையாகச் செயல்பட வேண்டும். அதன் பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட ஐஎஸ் குழுக்களை எதிர்த்து வெற்றிபெற மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சிரியாவுக்கு எதிராக துருக்கி இதுவரை எடுத்துவந்த நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, இப்படி மாறுவது எளிதான செயல் அல்லதான்! இதைச் செய்யாவிட்டால், துருக்கியின் நகரங்கள் குழப்பத்துக்கும் வன்செயல்களுக்கும் ஆளாவதைத் தடுக்க எத்தனை பெரிய ராணுவ நடவடிக்கைகளை அதற்குப் பிறகு எடுத்தாலும் பயனிருக்காது.

SCROLL FOR NEXT