தலையங்கம்

வாடிக்கையாளர் நலன் கருதி…

செய்திப்பிரிவு

இந்தியாவில் வங்கிகள் தொடங்கப்பட்ட காலத்தில் தொழிலதிபர்கள், மொத்த வியாபாரிகள், உயர் அதிகாரிகள், ஜமீன்தார்கள் போன்ற சமூகத்தின் செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே அவற்றின் சேவையைப் பயன்படுத்தினார்கள். சாதாரண மக்களுக்கு வங்கிகள் பக்கம் போக வேண்டிய அவசியமே இருந்ததில்லை.

இப்போது மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேரும் வேகத்துக்கேற்ப, வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையும் கிளைகளின் எண்ணிக்கையும் உயரவில்லை.

மகளிர் சுய வேலைவாய்ப்புக் குழுவினர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள்கூட வங்கிக் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகிவிட்டது. இவர்களில் பலர் வங்கிகளுக்குச் சென்று திரும்ப நாளின் பாதியை அல்லது அதற்கும் மேல் செலவிடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. பணம் எடுக்கவும் செலுத்தவும் வரும் வாடிக்கையாளர்கள் ‘போனோம், வந்தோம்’ என்று செயல்பட முடியாமல் தடுப்பது எது? வங்கிகளின் ஊழியர் பற்றாக்குறையும் ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டிய நிர்வாக நடைமுறைகளும்தான். இந்திய ரிசர்வ் வங்கியும் வங்கித் தலைமை நிர்வாகிகளும் கூடிப்பேசி இதை மாற்ற வேண்டும். இப்போதைய நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, வங்கி ஊழியர்களுக்குமே மனச் சோர்வையும் உடல் சோர்வையும் அளிக்கிறது.

இடைக்கால ஏற்பாடாக, இப்போதிருக்கும் வங்கிக் கிளைகளிலேயே இரண்டு கால நேர (ஷிப்ட்) முறைகளைக் கொண்டுவரலாம். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பணப்பரிமாற்றத்தை மட்டும் மேற்கொள்ளலாம். அதற்கு மட்டும் தனியாக ஊழியர்களை அமர்த்தலாம். இதனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.

இன்னொருபுறம், ஏ.டி.எம்-களுக்கு காவலர்களும் கண்காணிப்பு கேமராக்களும் அவசியம் என்று காவல் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியும் தகுந்த ஆள்கள் கிடைக்காததாலோ, சிக்கனம் கருதியோ காவலர்களை நியமிக்காமல் வங்கிகள் காலம் கடத்துகின்றன. இத்தகைய அலட்சியம் காரணமாகவே, பெங்களூரில் கார்ப்பரேஷன் வங்கியின் மேலாளர் ஜோதி உதய் கடந்த செவ்வாய்க்கிழமை ஏ.டி.எம்-மில் கொள்ளைக்காரன் ஒருவனால் கத்தியால் வெட்டப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.

2013 மார்ச் கணக்கெடுப்பின்படி, நாடு முழுக்க 1.14 லட்சம் ஏ.டி.எம்-கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் இவற்றின் எண்ணிக்கை 19.2% அதிகரித்துள்ளன. வங்கி நிர்வாகங்கள் இதுவரை தங்களுடைய ஏ.டி.எம். இயந்திரத்துக்கும் அதில் உள்ள பணத்துக்கும் பாதுகாப்பு கருதி மட்டுமே இடங்களைத் தேர்வுசெய்தனர். இனி, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்வார்கள் என்று நம்பலாம்.

கர்நாடகக் காவல் துறையினரின் கெடுவையும் நிபந்தனைகளையும் வங்கி நிர்வாகங்கள் விரும்பவில்லை. ‘ஏ.டி.எம்-களுக்கு நாங்கள்தான் காவலரைப் போட வேண்டும் என்றால், போலீஸ்காரர்கள் எதற்கு?’ என்று ஒரு வங்கியின் தலைமை நிர்வாகி அங்கலாய்த்திருக்கிறார்.

பெங்களூரு சம்பவம் பல குறைபாடுகளை அம்பலப்படுத்தி யிருக்கிறது. ஏ.டி.எம்-கள் ஏற்படுத்தப்பட்ட நல்ல நோக்கம் சிதையாமல் இருக்க வேண்டுமானால், இப்போதேனும் வங்கி நிர்வாகங்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT