தலையங்கம்

கேரளத்தில் முறிந்த அரசியல் உறவு

செய்திப்பிரிவு

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியோடு 35 ஆண்டுகாலமாகக் கூட்டணிக் கட்சியாக இருந்த கேரள காங்கிரஸ் (எம்) தனது உறவை முறித்துக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக அணியில் இடம்பெற்றிருந்த முக்கியமான கட்சி அது. அக்கட்சியின் தலைவரான கே.எம்.மாணி, பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உரசல்கள் உருவாகின.

எனினும், அம்மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக அணி ஆட்சியில் இருந்தவரை கூட்டணி முறியவில்லை. அப்போது உறவு முறிந்திருந்தால், அது இடது ஜனநாயக முன்னணிக்குச் சாதகமாகிவிடும் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தோல்விக்குப் பின்னர், தனது கூட்டணி உறவை முறித்துக்கொண்டிருக்கிறது கேரள காங்கிரஸ் (எம்).

மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்த மாணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பாகவே கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்யவைக்கப்பட்டார். மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சென்னிதாலா, தனக்குப் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக மாணி குற்றஞ்சாட்டினார். தற்போது சட்டப்பேரவையில் தனி அணியாக மாறியுள்ள கேரள காங்கிரஸ் (எம்)-க்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஒருவேளை இடது ஜனநாயக அணியினரிடம் நெருங்கிவிடலாம் என்ற நம்பிக்கை அந்தக் கட்சிக்கு இருக்கலாம்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கே.எம்.மாணியை எதிர்த்து இடது ஜனநாயக முன்னணி கடுமையாகப் பிரச்சாரம் செய்தது. தற்போது, காங்கிரஸிடமிருந்து பிரிந்து வந்துவிட்டதால், இடதுசாரிகளுக்கு தன் மீதான கோபம் குறைந்திருக்கும் என்று மாணி கருதலாம்.

அதே சமயம், கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் முன்பு உள்ள மாற்று அரசியல் வாய்ப்புகள் குறைவுதான். இடது ஜனநாயக முன்னணிக்குப் புதிய கூட்டணிக் கட்சிகள் தற்போது தேவையில்லை. அதுமட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்பாக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கடுமையாகத் தாங்கள் விமர்சித்த ஒரு கட்சியிடம் உறவுகொள்ள அவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும். கேரள மாநிலத்தின் பாஜகவோடு கூட்டணி சேர்வதில் கேரள காங்கிரஸ் (எம்)-க்கு விருப்பம் இருக்காது. கேரளத்தில் பாஜக ஒரு பெரிய சக்தியாக இல்லை என்பதும், கேரள காங்கிரஸ் (எம்)-ன் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமூகத்தினர்கள் என்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள் எனலாம். இந்தச் சூழலில், கேரளத்தில் உள்ள இரண்டு பெரும் அரசியல் அணிகளைத் தாண்டி, கேரள காங்கிரஸ் (எம்)-ன் எதிர்காலம் தாக்குப்பிடிக்காது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான போட்டியைப் பயன்படுத்தி, கேரளத்தில் உருவான மற்ற சிறு கட்சிகளைப் போலவே, கேரள காங்கிரஸ் (எம்) கட்சியும் தேர்தல் காலத்தில் உருவான ஒரு சக்திதான். சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய திறன் அக்கட்சிக்கு இருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சேர்வதற்கு முன்னதாக, இடது ஜனநாயக அணியில்தான் அது இருந்தது. கேரள காங்கிரஸ் (எம்) இப்போது எப்படி நடந்துகொண்டாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பெரிய அரசியல் கூட்டணிகளைத்தான் தேட வேண்டியிருக்கும். ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்து விலகியதன் மூலம், அது ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்த நிலை மாறக்கூடியதா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT