தலையங்கம்

தமிழகத்தின் பசுமை வேர்!

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலத்தின் ஹொரட்டி கிராமத்தின் மக்கள்தொகை 3,500. இரண்டு ஆண்டுகளாக மழையே இல்லை. குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயம் முடங்கியது. ஊருக்குள் ஓடிய பாசன வாய்க்கால் மண்மேடாகிப் போனது.

வாய்க்கால் தந்த வளத்தை மறக்காத கிராமவாசிகள் கூடிப் பேசினார்கள். ‘வான்மழையை வரவேற்கத் தயாராகுங்கள், மழைநீரைச் சேமியுங்கள்’ என்று விளம்பரம் மட்டும்தான் அரசு செய்யும் என்ற புரிதல் அவர்களுக்கு. 8 கி.மீ. நீளமுள்ள வாய்க்காலை நவீன இயந்திரங்களால் நாமே தூர்வாரி அகலப்படுத்தி, ஆழப்படுத்துவோம் என்று துணிந்தனர். 700 விவசாயிகள் இணைந்தனர். 6 லட்ச ரூபாய் ஆகும் என்று மதிப்பிட்டனர். கைப் பணத்திலிருந்து ரூ.3 லட்சத்தைத் திரட்டினார்கள். மாநிலத்தின் மற்ற பகுதி விவசாயிகளும் நிதி அளித்தனர். சில தொழிலதிபர்கள் மண் அள்ளும் இயந்திரங்களும் கொடுத்தனர்.

மே 17-ல் தொடங்கிய வேலை 24 மணி நேரமும் இடைவிடாமல் நடந்தது. மே இறுதிக்குள் பாசன வாய்க்கால் தூர்வாரி ஆழமாய், அகலமாய் மாறியது. வாய்க்காலின் கரையெங்கும் பழமரங்களும் நட்டுள்ளனர். கிராம வருவாய் பெருக பழங்களும் உதவும்.

இதை ‘முடிக்க முடியாத பிரம்மாண்ட வேலை’ என்ற ஒரு மாயையை மாநில அரசு அதிகாரிகள் கிளப்பியிருப்பார்கள். விவசாயிகளின் தூர்வாரலைத் தடுக்காததே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.

இந்தச் சம்பவத்துக்குள் பல உண்மைகள் கருக்கொண்டுள்ளன. விவசாயத்துக்கான அடிப்படைப் பிரச்சினைகளைக்கூட அரசுகள் செய்யும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கிடக்க முடியாது என்பது அவற்றில் முக்கியமானது. இந்தப் பிரச்சினையை ஆளுங்கட்சியிடம் செய்யச்சொன்னால், முதல்வரின் ‘கவனத்துக்கு’க் கொண்டு செல்வார்கள். அவர் அதிகாரிகளிடம் ‘பொறுப்பை’ ஒப்படைப்பார். அவர்கள் துறை அதிகாரிகளிடம் ‘ஆலோசனை’ நடத்துவார்கள். யாரோ ஒரு அதிகாரி இதை ‘உடனே ஏன் எடுத்துக்கொள்ள முடியாது’ என்று காரணங்கள் காட்டுவார். இதற்குள் கோப்பு பலமுறை மேலும் கீழும் ஊஞ்சலாடும். விவசாயிகளின் கேள்விகளுக்கு, ‘பரிசீலனையில் இருக்கிறது’, ‘போர்க்கால அடிப்படை’யில் முடிக்கப்படும் எனும் பதில்கள் வாரி வழங்கப்படும். அப்படியே எல்லாம் முடிந்து ஆரம்பகட்டமாக வேலையைத் தொடங்கும்போதே மழை வந்துவிடும். தோண்டிய சில அடிகள் பள்ளத்தில் தண்ணீர் தேங்கும். மழைக்காலம் முடியட்டும் என்பார்கள் அதிகாரிகள். மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் தண்ணீரில்லாமல் மக்கள் அலைவார்கள்.

சரி, எதிர்க்கட்சிக்காரர்களிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றால், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பார்களே தவிர, தூர் வாரல் வேலை நடக்காது.

மராட்டிய விவசாயிகளிடம் பிற மாநில விவசாயிகள் பாடம் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் சில ஊர்களில் விவசாயிகள் தாங்களாகவே ஏரி, குளம், கால்வாய்களைச் சீரமைக்கின்றனர் எனும் செய்திகள் வருகின்றன. சமூகத்தின் இதர பிரிவினரும் விவசாயிகளுக்கு உதவ முன்வர வேண்டும்.

சென்னை மாநகர வெள்ள பாதிப்பின்போது ஒட்டுமொத்த மக்களும் ஒரே சமுதாயமாக ஒன்று திரண்ட உணர்வு மாநிலம் முழுக்க ஏற்பட வேண்டும். இத்தகைய சமூக நிர்மாணப் பணிகளில் குறுகிய அரசியல் உணர்வுகள் கலக்கவே கூடாது. நீர்ப்பாசனக் கட்டமைப்பு தமிழ்நாட்டில் மோசமாகப் பாழ்பட்டிருக்கிறது. கழிவுநீர் வாய்க்கால்களின் நீரைக்கூட சாலையோர மரங்கள், செடிகளுக்குப் பாய்ச்சி பசுமை பூத்துக் குலுங்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டைத் தண்ணீர் மிகை மாநிலமாக மாற்றிக்காட்ட வேண்டும். தமிழ்நாட்டு ஆறுகள் தூய்மைப்பட வேண்டும். பசுமைத் தமிழகத்தின் வேர்களாகட்டும் மராட்டிய விவசாயிகளின் அனுபவம்!

SCROLL FOR NEXT