தலையங்கம்

அடுத்தடுத்த படிகளுக்கு இந்திய - பாகிஸ்தான் உறவை எடுத்துச் செல்லுங்கள்!

செய்திப்பிரிவு

மோசமான நிலையை எட்டியிருந்த இந்திய பாகிஸ்தான் உறவுகள் சீரடையும் சமிக்ஞைகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. சிந்து நதிநீர்ப் பகிர்வு ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பது என்ற விவேகமான முடிவை இந்திய அரசு எடுத்திருக்கிறது. இந்தப் பேச்சு நடைபெற உலக வங்கி தந்த ஊக்கமும் பாகிஸ்தான் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்ததும் முக்கிய காரணங்களாகும். இவ்விரண்டு அம்சங்கள் போக, இரு நாடுகளும் எடுத்த சில நடவடிக்கைகள்கூட இதற்குக் காரணம். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அப்பாலிருந்து இந்தியக் கிராமங்களை நோக்கி சுடுவதை பாகிஸ்தான் குறைத்துக்கொண்டிருக்கிறது. அணு ஆயுதம் தொடர்பான பட்டியல்களை இரு நாடுகளும் வழக்கம்போலப் பரிமாறிக்கொண்டன. இரு நாடுகளும் தத்தமது சிறைகளில் உள்ள கைதிகளை விடுவித்தன. ‘சார்க்’ அமைப்பின் தலைமைச் செயலராக பாகிஸ்தான் நியமிப்பவரைத் தேர்வுசெய்ய இந்தியா சம்மதம் தெரிவித்ததால், கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாமே வழக்கமாக நடைபெறும் சம்பிரதாயங்கள்தான் என்றாலும், கடந்த ஆண்டுக்குப் பிந்தைய கசப்புச் சூழலுக்குப் பின் நடப்பதாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன.

உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நிலை மோசமானது. பயங்கரவாதச் செயல்கள் நடைபெறாமல் இருந்தால்தான் இனி பேச்சு என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. “நம்முடைய ரத்தத்தை வடியச் செய்யும் நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடச் செல்வதை அனுமதிக்க முடியாது” என்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி மிகவும் கோபமாகப் பேசினார். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி இந்தியத் துருப்புகள் சென்று ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தி பயங்கரவாதிகளையும் அவர்களுடைய முகாம்களையும் அழித்துத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் நடந்த ‘சார்க்’ உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் இந்தியா வெளியேறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உறைநிலைக்குச் செல்லும் அச்சம் சூழ்ந்தது.

இந்திய பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு உறவுகள் மிகவும் மோசமான காலத்திலும்கூட, சிந்து நதி நீரைப் பகிர்ந்துகொள்வதற்காக 1960 உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட நிரந்தர நதிநீர் ஆணையக் கூட்டம் குறிப்பிட்ட நாட்களில் நடந்துவந்திருக்கிறது. சிந்து நதி மட்டுமல்லாது மேலும் ஐந்து நதிகளின் நீரையும் இரு நாடுகளும் பயன்படுத்திக்கொள்வது தொடர்பிலும், சர்ச்சைகள் இருந்தால் பேசித் தீர்ப்பதற்கும் நதி நீர்ப் பகிர்வு நிபுணர்கள் இந்த ஆணையத்தில் இடம்பெற்றுள்ளனர். காலத்தைக் கடந்து நிற்கும் இந்த உடன்படிக்கையை மதிப்பதிலும், ஜீவாதாரமான தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதிலும் தனக்கு உள்ள தார்மிகப் பொறுப்பை உணர்த்தும் வகையிலேயே இந்திய அரசு செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம், இந்த நல்லெண்ண நடவடிக்கைகள் அடுத்து நீடித்த அமைதிக்கான சூழலை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கைகளை இரு அரசுகளுமே எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT