பணமதிப்பு நீக்கத்தால் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு சாதித்துவந்த நிலையில், ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டில் வளர்ச்சி வீதம் குறைந்ததால் ஒட்டுமொத்த வளர்ச்சியும் குறைந்திருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
2016-17 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 7.1% என்று இறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவிலான வளர்ச்சிக் குறைவு இது. 2015-16-ல் இது 8% ஆக இருந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் அதிலும் குறிப்பாக ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. உலக வங்கியும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டது.
மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் ஜனவரி தொடக்கத்திலும் பிப்ரவரியின் இறுதியிலும் அளித்த தகவல்கள்படி, இது எதிர்பார்க்கப்பட்டதுதான். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 2% வீழ்ச்சி அடையும் என்று பலர் அச்சம் தெரிவித்தபோது, அரசின் சார்பில் பேசிய மூத்தப் பொருளாதார அறிஞர் அவர்களையெல்லாம் கடுமையாகச் சாடினார். ஆனால், 2016-17 நிதியாண்டில் நான்கு காலாண்டுகளில் வளர்ச்சி வீதம் 7.9%, 7.5%, 7%, 6.1% என்று படிப்படியாகக் குறைந்துவந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 7.1% என்ற அளவுகூட முந்தைய காலாண்டின் வளர்ச்சி வீதத்தை சற்றே மாற்றிக் கணக்கிட்டு உயர்த்தியதால் கிடைத்திருக்கிறது.
நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் மொத்த மதிப்புக் கூட்டல் அளவு (ஜி.வி.ஏ.) வெறும் 3.8% ஆக இருக்கிறது. முதல் காலாண்டில் இது 8.4% ஆக இருந்தது. வேளாண்மைத் துறையும் அரசும் தங்களுடைய செலவுகளை அதிகப்படுத்தியும்கூட இப்படிச் சரி்ந்திருக்கிறது.
தனியார் செலவழிப்பதும் தொழில்-வர்த்தகத்தில் முதலீடு செய்வதும் குறைந்ததும் ஒரு காரணம். ‘பணக் கொள்கை’ மூலமாக மட்டும் வளர்ச்சியை அசுர வேகத்துக்கு ஊக்குவித்துவிட முடியாது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளிடம் ரொக்கம் அதிகமாகக் குவிந்திருக்கிறது. ஆனால், கடன் கேட்பது அதிகரிக்கவில்லை.
உலக அளவில் பொருளாதார மீட்சி ஏற்பட்டுவிடவில்லை. நிலைமை எப்படி மாறும் என்று ஊகிக்கவே முடியவில்லை. நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய அளவை அரசு முழுமையாகச் செலவிட்டால்கூட அது, கடந்த ஆண்டைவிடக் குறைவாகத்தான் இருக்கும். தனியார் முதலீடு என்பது கிட்டத்தட்ட பூஜ்யமாக இருக்கிறது. மீண்டும் 8% வளர்ச்சியை எட்டுவது பெரிய சவால்தான். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, பெரிய அளவிலான சீர்திருத்தங்களை அரசு விரைந்து மேற்கொண்டால்தான் இந்த வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்.