2014 பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வலுவுடன் பாஜக வென்று ஆட்சிக்கு வந்தது முதலே, வலுவான ஒரு மக்கள் பிரச்சினையில் அதைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தருணம் பார்த்துக்கொண்டிருந்தன. எதிர்க்கட்சிகளால் உருவாக்க முடியாத அந்தத் தருணத்தை பிரதமர் மோடியே உருவாக்கிக்கொடுத்தார்; நவம்பர் 8 அன்று வெளியிட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பின் மூலமாக. பிரதமர் கூறிய எதுவும் நடக்காததோடு, அவர் கேட்ட 50 நாள் அவகாசமும் கடந்துபோயிற்று. மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, கோபம், ஏமாற்றம், கையறு நிலையை ஒருங்கிணைத்து அரசைக் கேள்வி கேட்க இதைவிடவும் ஒரு தருணம் வாய்க்குமா?
கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில் பேசுவது தவிர்க்க முடியாதது. ஆனால், முக்கியமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்றத் துக்குள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் முக்கியப் பொறுப்பாளி ராகுல் காந்தி. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் அடைந்துவரும் பாதிப்புகளை எடுத்துச் சொல்ல குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் அனுமதி வாங்கியிருந்தன. அதே நாளில், விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராகுல் காந்தி இதர காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். முந்தைய நாள் வரை, ‘நாடாளுமன்ற முடக்கத்துக்கு மோடியே காரணம்’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் சொல்லிவந்த நிலையில், திடீரென்று இப்படி பிரதமரைத் தனித்துப் போய்ப் பார்க்க எப்படி முடிவெடுத்தார் ராகுல்? சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் எனப் பலரிடமும் காங்கிரஸின் இந்த அணுகுமுறை வருத்தத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியது.
இதனால், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள் என்று அறிவித்த கூட்டத்தில் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி ஆகியோர் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்காத பல கட்சிகள் காங்கிரஸுடன் நீண்ட காலமாகத் தோழமையுள்ள கட்சிகள். பணமதிப்பு நீக்க அறிவிப்பை வரவேற்ற ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் நடத்திய மகா தர்ணாவில் பங்கேற்கவில்லை என்பது இந்தப் பிளவுக்குள் ஏற்பட்டுள்ள இன்னொரு உட்பிளவுக்கான சாட்சியம்.
ஒரு அரசு, மக்கள் நல அரசாகச் செயல்பட எதிர்க்கட்சித் தரப்பு வலுவாகச் செயல்படுவது முக்கியம். இம்முறை எண்ணிக்கைப் பெரும்பான்மை எதிர்த் தரப்புக்குச் சாதகமாக இல்லாத சூழலில், ஒற்றுமையான செயல்பாடே அரசிடத்திலும் மக்களிடத்திலும் அவர்களைக் கவனிக்க வைக்கும். அதிலும் தேறாதவர்களை, ஒன்றுசேராதவர்களை என்னவென்று சொல்வது? மக்கள் பாவம்!