தலையங்கம்

தார்மிக அடிப்படை அறம் இன்னமும் மிச்சம் இருக்கிறதுதானே?

செய்திப்பிரிவு

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததாகத் தொடரப்பட்டு, மரணப் படுக்கையில் இருக்கும் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் புத்துயிர் கொடுத் திருக்கிறது. 1992 டிசம்பர் 6-ல் மசூதி இடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, இடிப்பு தொடர்பில் எண்ணற்றோர் மீது ஒரு வழக்கும், இரு வேறு மதத்தவரிடையே பகைமையையும் கசப்புணர்வையும் உருவாக்கியதாக பாஜக மூத்த தலைவர்கள் மீது ஒரு வழக்கும் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான அறிவிக்கையில் உத்தர பிரதேச அரசு செய்த தவறும், மத்தியப் புலனாய்வு அமைப்பு அதை உரிய நேரத்தில் களையத் தவறியதும் பொதுவான அலட்சியமும் என எல்லாமுமாகச் சேர்ந்து 25 ஆண்டுகள் இழுத்தடிக்கப்படக் காரணங்கள் ஆகிவிட்டன. இப்போது உச்ச நீதிமன்றத்தின் மூலம் வழக்குகள் பெற்றிருக்கும் புத்துயிர்ப்பு வரவேற்கத்தக்கது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதான, ‘குற்றம்புரியும் நோக்கில் சதி செய்ததனர்’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் விசாரணை தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது இங்கே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழக்குகளை, ‘அரசியல் கண்ணோட்டத்திலான வழக்குகள்’ என்று இதுவரை மறுத்துவந்ததுபோல இனியும் பாஜக தலைவர்கள் மறுக்க முடியாது. மசூதி இடிப்பின் பின்னணியில் சதி நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்குக்கு உயிர் கொடுத்திருப்பதால், இது ‘அரசியல் நோக்கிலான வழக்கு’ என்ற வாதம் அடிபட்டுப்போகிறது. அத்வானியைப் பொறுத்தவரை இந்த வழக்கு விசாரணை அவருடைய நீண்ட அரசியல் வாழ்க்கையில் விழுந்திருக்கும் திரை.

மசூதி இடிக்கப்பட்ட நாளில் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் இப்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருக்கிறார். அவருடைய பதவிக் காலம் முடிந்த பிறகுதான் அவர் மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், தார்மிக அடிப்படையில் அவர் பதவியில் நீடிப்பது எந்த அளவுக்கு நியாயமானதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. மத்திய அமைச்சர் உமா பாரதி மீதான வழக்கையும் திரும்ப நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவருக்கும் இந்தக் கேள்வி பொருந்தும்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் எந்த மத்திய அமைச்சர் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டாலும் தார்மிக அடிப்படையில் அவர்கள் விலக வேண்டும் என்று அதிகம் வலியுறுத்தியதே பாஜகதான். நாடாளுமன்றத்தில் இந்த வாதத்தை வலுவாக எழுப்பி, அப்போது அது காரியமும் சாதித்திருக்கிறது. ஆக, கல்யாண் சிங், உமா பாரதி இருவரும் பதவியில் நீடிப்பது தொடர்பில் ஒரு முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உருவாகியிருக்கிறது. சட்டரீதியில் இல்லாவிட்டாலும் தார்மிகரீதியில் இதற்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் பிரதமர் மோடிக்கு உண்டு!

SCROLL FOR NEXT