பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள் தாக்கப்படுவதைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நெருக்கடிகளின்போதும் குழப்பமான காலகட்டங்களிலும் மெளனமாக இருப்பது என்பது ஒரு தந்திரம்தான். ஆனால், ஆளுங்கட்சியோடு தொடர்புடையதாகக் கருதப்படும் பல குழுக்கள் வன்முறையில் ஈடுபடும்போது தொடர்ந்து மெளனம் சாதிக்கும் மோடி, மிகத் தாமதமாகவே அவற்றைப் பற்றிக் கருத்து தெரிவிக்கிறார். அவரது சமீபத்திய கண்டனம் அப்படிப்பட்டதுதான்!
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் ஒரு இஸ்லாமியர் கொல்லப் பட்டபோதும் சரி, குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டபோதும் சரி, அதை யெல்லாம் மோடி ஏற்றுக்கொள்கிறார்போலும் என்று விமர்சனங்கள் எழும் போதுதான் மோடி வாய் திறக்கிறார். அப்படியான தருணங்களில் மிகக் கடுமையாகவே பேசிவிடுகிறார், இப்படியெல்லாம் முன்பே ஏன் அவர் பேசவில்லை என்று பலர் யோசிக்கும் அளவுக்கு. கடந்த வாரம், பசுவின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுபவர்களைக் கடுமையாக விமர்சித்த மோடி, அத்தகையவர்களிடமிருந்து விலகி நிற்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுபவர்களைச் சமூகவிரோதிகள் என்றும், பசு பாதுகாவலர்கள் என்ற முகமூடியில் செயல்படும் குற்றவாளிகள் என்றும் சாடினார்.
ஆனால், மோடியிடமிருந்து இத்தனை தாமதமாக, அதே சமயம் கடுமையாக வெளிப்படுகிற இந்த எதிர்வினையை எப்படிப் புரிந்து கொள்வது? இதற்கும் மோடியே விளக்கம் அளித்திருப்பதாகத் தோன்று கிறது. மாநிலங்களிலும் கிராம அளவிலும் நடப்பவற்றுக்குப் பிரதமரைப் பொறுப்பேற்கச் செய்ய முடியாது என்கிறார் அவர். நாட்டில் நடைபெறுகிற மலினமான சம்பவங்கள் தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுகின்றன. அவற்றிலிருந்து விலகியிருப்பவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள மோடி விரும்பலாம். அது சாத்தியமானதுதான். ஆனாலும், சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் எல்லா நேரமும் இருக்க முடியாது. சட்டம் - ஒழுங்கைக் காப்பது மாநில அரசுகளின் கடமை என்பது உண்மைதான். ஆனால், கடைசியாக வேறு வழியில்லாமல் செய்வதை முன்பாகவே மோடியால் செய்ய முடியும். அவர் அதைக் கட்டாயம் செய்ய வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுபவர்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு மாநில அரசுகளைக் கோரலாம். ஒரு நாகரிகமான, ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை என்று அழுத்தமாக மாநிலங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
மோடி தாமதமாகக் கருத்து தெரிவிப்பது அவரது கருத்துகள், நோக்கங்கள் தொடர்பான விமர்சனங்களுக்கு அதிக இடம் தருகிறது. பாஜகவின் உடனடியான தேர்தல் ஆதாயங்கள், சங்கப் பரிவாரங்களின் சித்தாந்தம் ஆகியவற்றின் பின்னணியில்தான் அவரது வார்த்தைகள் அலசப்படும் என்பதில் ஆச்சரியமில்லை. பசுவின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதைக் கண்டித்து அவர் பேசியதை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பசுப் பாதுகாப்புக் குழுக்கள் விமர்சித்துள்ளன. அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் குஜராத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தலித்துகளைக் கட்டுக்குள் வைப்பதற்கான கடைசி முயற்சிகளைப் பாஜக எடுக்கிறது.
ஒரு பிரதமர் என்ற முறையில் தனது ஒவ்வொரு வார்த்தையும் செயலும் கூர்ந்து கவனிக்கப்படும் என்பதை மோடி உணர வேண்டும். அவரை விமர்சிப் பவர்கள் மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களும் அவரது பேச்சைக் கவனிப் பார்கள். எல்லா வகையான வன்முறைக்கும் எதிராகக் கட்டாயம் மோடி பேச வேண்டும். குறிப்பாக, சித்தாந்தரீதியாக அவரது கட்சியோடு தொடர் புடைய அல்லது தொடர்புடையதாக நினைத்துக்கொள்கிற குழுக்களைப் பற்றி அவர் அவசியம் பேச வேண்டும். இல்லையென்றால், ஒவ்வொரு இந்திய ரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மோடி, அதில் வெற்றி பெற முடியாமல் போய்விடும்!