தலையங்கம்

பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம்!

செய்திப்பிரிவு

நீண்டகாலத் தாமதத்துக்குப் பின்னர், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது பாகிஸ்தான். மார்ச் மாதத்துக்குள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தற்போது பணிகளைத் தொடங்கியிருக்கிறது. கடந்த 19 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்தும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகள், இனக் குழுக்கள் தரப்பிலிருந்து வரும் அழுத்தம் காரணமாகக் கணக்கெடுப்பு தாமதமானது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இனக் குழுக்கள் எதிர்ப்பதன் பின்னணி புரிந்துகொள்ளக் கூடியதே. 1998-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்குப் பிறகு, பாகிஸ்தானில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந் துள்ளன. பஞ்சாப் மாகாணத்தின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துகொண்டிருக்கும் சூழலில், சிந்து மாகாணத்தில் பெரிய அளவில் மக்கள் வருகை இருக்கிறது. எனினும், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பல சிந்தி மக்களிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதால், அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று சிந்து மாகாணத்தின் அரசியல் கட்சிகள் கூறுகின்றன.

மறுபுறம், மக்கள்தொகை பலத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசியலில் தாங்கள் கொண்டிருக்கும் செல்வாக்கு குறைந்துவிடும் என்று பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சுகிறார்கள். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிச் செல்லும் வரை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்பட வேண்டும் என்பது அம்மாகாணத்தின் அரசியல் குழுக்களின் நிபந்தனை. பலுசிஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவின்படி மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அகதிகள் சேர்க்கப்படவில்லை.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தைப் பொறுத்தவரை, வெளியில் சென்ற உள்ளூர் மக்கள் மீண்டும் திரும்புவது, ஆப்கன் அகதிகளின் வருகை போன்ற காரணங்களைக் காட்டி இந்தப் பணிகளுக்கு பழங்குடிக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறுமனே தலைகளை எண்ணும் விஷயம் அல்ல. மக்கள்தொகை அடர்த்தி, பாலின விகிதம், கல்வியறிவு விகிதம், பொருளாதாரச் சூழல்கள், வேலைவாய்ப்பு என்று பல்வேறு தரவுகளை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வழங்கவல்லது. பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பாகிஸ்தான் தற்போது முன்பைவிட நிலையான பாதையில் செல்கிறது.

அடுத்த ஆண்டு நிறைவடையும் நவாஸ் ஷெரீப்பின் அரசுக்கு, எந்தவித இருப்பியல் சிக்கல்களும் இல்லை. பாகிஸ்தான் வரலாற்றில் முழுமையான ஆட்சியை நிறைவு செய்யும் இரண்டாவது அரசு இதுதான்.

இது நீண்டகால சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை நவாஸ் ஷெரீப்புக்கு வழங்கியிருக்கிறது. புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சாத்தியமான வளங்கள் ஒதுக்கீடுகளை மேற்கொள்வது, மாகாணங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளில் மாற்றம்செய்வது போன்ற நடவடிக் கைகளை அவர் உறுதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

SCROLL FOR NEXT