சர்வதேச விண்வெளித் துறையில் குறிப்பிடத் தகுந்த மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது நாஸா. வியாழன் கிரகத்தின் தீவிரமான காந்தப்புலத்திலும் கதிர்வீச்சிலும் தாக்கப்படாத வகையில் தனது சுற்றுப்பாதையில் ‘ஜூனோ’ விண்கலத்தை வெற்றிகரமாக நுழைத்திருக்கிறது. வியாழன் ஆராய்ச்சியில் ஜூனோ முக்கியமான பங்கு வகிக்கும்.
இந்த விண்கலம் 2011 ஆகஸ்ட் 5-ல் புறப்பட்டு 280 கோடி கி.மீ. பயணம் செய்துள்ளது. முன்னதாகத் திட்டமிட்டதைவிடக் கூடுதலாக, நெருக்கமாக அது வியாழனை நெருங்கியுள்ளது. வியாழனைச் சுற்றுகிற முதல் விண்கலம் அல்ல இது. இதற்கு முன்னதாக கலிலியோ விண்கலம் வியாழனை 1995 முதல் 2003 வரை சுற்றியது. அதைவிட நுட்பமான முறையில் ஜூனோ வியாழனை ஆராயும். அதற்காக அதில் ஒன்பது விதமான விஞ்ஞானக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த முறை கலிலியோ விண்கலத்தின் ஒரு துணைக் கலம் மட்டுமே வியாழன் கோளின் அடர்ந்த மேகங்களுக்குள் நுழைந்து ஆராய முடிந்தது. ஆனால், இப்போது வியாழனைச் சுற்றியுள்ள அடர்த்தியான மேகங்களுக்குக் கீழே ஜூனோவால் பார்க்க முடியும். மேக அடுக்குகளுக்கு மேலாக 5,000 கி.மீ. வரை நெருங்கிச் சென்று அவற்றை ஊடுருவி வியாழன் கிரகத்தின் குறிப்பிட்ட பரப்புகளை அருகில் பார்த்து ஜூனோவால் படம் எடுக்க முடியும். வியாழன் கிரகத்தின் தோற்றம், பரிணாமம், பூமியைப் போல அதன் உட்புறம் பாறைகளால் அமைந்துள்ளதா என்பதை ஜூனோ ஆராயும்.
வியாழனுக்கு எப்படி ஒரு தீவிரமான காந்தப்புலம் அமைந்துள்ளது என்பதை இன்னும் விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் உள்ளடுக்கு மேகங்களில் தண்ணீரும் அம்மோனியாவும் உள்ளன. அவற்றின் மீது சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையேயான பரிமாற்றங்கள் பிரதிபலிக்கப்பட்டு வானத்தில் ஏற்படும் மின்னேற்ற ஒளிக் காட்சிகளும் ஆராயப்பட உள்ளன.
இன்னும் சில நாட்களில் வியாழனின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்குப் போகும் வகையில் ஜூனோவின் சுற்றுப்பாதையின் இயக்கம் அமையும். தனது சுற்றுப்பாதையில் அது வியாழனை ஆகஸ்ட் மாதக் கடைசியில்தான் நெருங்கிவரும். அப்போதுதான் முதல் சுற்று முடியும். அதன் பிறகுதான் ஆய்வு முடிவுகள் வெளியாகத் தொடங்கும். இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழன் கிரகத்தைச் சுற்றும்படி அக்டோபர் மாதத்தின் நடுவில் ஜூனோ விண்வெளியில் நிலைகொள்ளும். அதன் பின் சீரான அறிவியல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
ஒருகாலத்தில் இப்போதுள்ள நிலைக்கும் மிக அருகில் சூரியனை வியாழன் கிரகம் சுற்றிவந்தது எனவும், பின்னர்தான் அதன் பாதை விலகிச் சென்றுள்ளது என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதை ஜூனோவின் ஆய்வுகள் மூலமாகத் தற்போது சரிபார்க்க முடியும். வியாழன் கிரகத்தை விண்கலம் அவ்வளவு நெருக்கத்தில் சுற்றுவது என்பது மைக்ரோவேவ் அடுப்பின் உள்ளே எலெக்ட்ரானிக் சாதனங்களை வைப்பதைப் போன்றது. வியாழன் வெளிப்படுத்தும் தீவிரமான கதிர்களால் தாக்கப்பட்டு மின்னணுக் கருவிகள் காலப்போக்கில் பழுதடைந்துவிடும். இதை எதிர்கொள்ளும் வகையில் டைட்டானியம் கவசம் ஒன்று அதற்கு அணிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பிப்ரவரி 2018 வரைதான் இந்த விண்கலம் தாக்குப்பிடிக்கும் என்கிறார்கள். இதற்குள் இந்த விண்கலம் 37 முறை வியாழனை வலம் வந்துவிடும். நமக்கு அரிய தகவல்களைச் சேகரித்துத் தந்துவிட்டு, இறுதியில் வியாழன் கிரகத்துக்குள்ளேயே விழுந்து எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், அதன் கண்டுபிடிப்புகள் மனித குல வரலாற்றில் பொதிந்திருக்கும்!