தலையங்கம்

வீரர்களின் துயர் துடைப்போம்!

செய்திப்பிரிவு

துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த வீரர்களும், ராணுவ வீரர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் பற்றிய காணொளிக் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றிவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் பல்வேறு புகார்களை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவையெல்லாம் ஒழுங்குக் கட்டுப்பாட்டை மீறும் செயல்கள் என்றாலும், நமது பாதுகாப்பு அமைப்பின் ஆரோக்கியம் தொடர்பான ஆழமான ஆய்வுகளைத் தொடங்குவதற்கு இவை வித்திடுகின்றன என்றும் சொல்லலாம். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் பாதுகாப்பில் இருக்கும் தங்களுக்குக் கருகிப்போன ரொட்டிகளும், நீர்த்துப்போன பருப்புச் சாம்பாரும் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் ஒரு காணொளியைப் பதிவேற்றியதுதான் இந்நிகழ்வுகளின் தொடக்கம். மடை திறந்ததுபோல், பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்களும் அதுபோன்ற காணொளிகளைப் பதிவேற்றத் தொடங்கிவிட்டார்கள்.

ராணுவத்தின் 42-வது காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த வீரரான யக்ய பிரதாப் சிங்கும் தனது குறைகளைக் காணொளி மூலம் வெளிப்படுத்தினார். மூத்த அதிகாரிகளின் உடைகளைத் துவைப்பது, காலணிகளுக்கு ‘பாலீஷ்’ போடுவது முதல் அவர்கள் வீட்டு நாய்களைக் குளிப்பாட்டுவது வரை பல்வேறு பணிகளைச் செய்வதற்குத் தாங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், இது தொடர்பாகப் புகார் அளித்ததால், தன் மீது நீதிமன்ற விசாரணை நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் உணவில் 40% மட்டுமே கிடைப்பதாக ராணுவத்தில் மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் ராம் பகத் குற்றம்சாட்டியிருந்தார். ராணுவ அதிகாரிகளுக்கு உதவி செய்வதே தங்களுக்கு வழங்கப்படும் பிரதான பணியாக உள்ளதாகக் குமுறியிருந்தார். இந்தக் காணொளிகள் தொடர்பாக துணை ராணுவப் படைகள் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உத்தரவிட்டனர். ‘‘உணவு, பதவி உயர்வு உள்ளிட்ட எந்தக் குறைகளாக இருந்தாலும், வீரர்கள் அதைத் தெரிவிக்க ராணுவத் தலைமை அலுவலகங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்படும். தங்கள் குறைகளை வீரர்கள் அதில் தயக்கம் இல்லாமல் தெரிவிக்கலாம்’’ என்று ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் அறிவித்தார். எனினும், இந்தப் புகார்களை உயரதிகாரிகள் பலர் திட்டவட்டமாக மறுத்தார்கள்.

வீரர்கள் இப்படித் தனிப்பட்ட முறையில் தங்கள் குறைகளைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவது கட்டுப்பாட்டை மீறும் செயல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வீரர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் மனவருத்தத்தை அலட்சியம் செய்யக் கூடாது. அவர்களின் குறைகளைக் களையும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது. அதற்கான எச்சரிக்கை மணியாகவே வீரர்களின் பதிவுகளைக் கருத வேண்டும்!

SCROLL FOR NEXT