தமிழகத்தை 'தை எழுச்சிப் போராட்ட'மும் தமிழ் முழக்கங்களும் நிறைத்திருந்த நாட்களில், ஒவ்வொரு தமிழரையும் தலைகுனிய வைக்கும் வகையில், ஒரு தலித் சிறுமியின் ஓலக் குரல் கேட்பாரின்றி அடங்கியிருக்கிறது. அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது நந்தினி, டிசம்பர் 26 அன்று காணாமல்போனார். புகாரை போலீஸார் அலட்சியமாகக் கையாண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் தந்த அழுத்தத்தின் விளைவாக நடவடிக்கைகள் தொடங்கி, ஜனவரி 14 அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில் இந்தச் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது.
கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் நந்தினியும் காதலித்ததாகவும் விளைவாக, நந்தினி கருவுற்றதாகவும் திருமணத்துக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நந்தினியைத் தன்னுடைய பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பழகிய மணிகண்டன், தனது நண்பர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோருடன் சேர்ந்து அவரைக் கொன்றதாகப் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நந்தினி கொல்லப்படுவதற்கு முன்பு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந் தப்பட்ட நான்கு இளைஞர்களும் இப்போது கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள்.
நந்தினி காணாமல்போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதும், 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது என்பதும் 20 நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் காவல் துறையின் அலட்சியப் போக்குக்கு ஓர் உதாரணம். சாதியம் சார்ந்து நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கின்றனவே அன்றி குறையவில்லை. 2010-ல் தலித் மக்களுக்கு எதிராக 32,712 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருக்கும் தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகக் கணக்குப்படி, அதற்குப் பிந்தைய ஐந்து ஆண்டுகளில் 44% அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 1,782 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய் சாதியம் என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறைகள் தொடர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அரசும் காவல் துறையும் பல நேரங்களில் பாதிப்பை உள்ளாக்குவோருக்குச் சாதகமாக நடந்துகொள்வது. இப்படியான சம்பவங்களில் சாதி, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் போலீஸார் நீதியை வளைப்பது ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்துவந்திருக்கிறது. நந்தினி கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் தப்புவதற்கே நிறைய வாய்ப்பிருப்பதாகப் பாதிக்கப்பட்டோர் கூறுவது கவலை தருகிறது. ஒரு நல்ல அரசு, அடிப்படையில் எல்லோருக்குமான அரசாக இருக்க வேண்டும். இப்படியான விஷயங்களில் கறாரான நிலைப்பாட்டை அது எடுக்க வேண்டும்.