நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் பிடித்திருக்கிறது ரயில்வே நிதிநிலை அறிக்கையைப் பொது நிதிநிலை அறிக்கையுடன் சேர்ப்பதற்கு. 1924-ல் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது பிற துறைகளின் செலவுகளைவிட ரயில்வே துறைக்கு அதிகம் செலவானதால் அதன் வரவு - செலவுக் கணக்குகளைத் தனியாகவும் வெளிப்படையாகவும் காட்ட வேண்டிய அவசியம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இருந்தது. இந்த நிலை எப்போதோ மாறிவிட்டது. இந்த ஆண்டு இந்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தச் செலவு மதிப்பில் ரயில்வேக்கான ஒதுக்கீடு வெறும் 6%. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இதைவிட அதிக வருவாய் கிடைக்கிறது.
இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு (ராணுவம்) மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அதைப் பற்றி நிதி அமைச்சரின் உரையில் அதிக ஆரவாரம் கிடையாது. பொருளாதாரத்தை உலகமயமாக்கலுக்குத் திறந்துவிட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் ரயில் துறைக்குத் தனி பட்ஜெட் என்ற சம்பிரதாயத்தைக் கைவிடாமல் இருந்தோம். இப்போது பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது.
இனி, வருடாந்திர நிதிநிலை அறிக்கைத் திருவிழா இரண்டு நாட்களில் முக்கிய கட்டத்தைத் தாண்டிவிடும். முதல் நாள், நாடு முழுவதற்குமான பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகும். அடுத்த நாள், பொது நிதிநிலை அறிக்கை தாக்கலாகும். ரயில்வே துறையின் சீரமைப்புக்கும் இது வழிவகுக்கும். “ரயில் கட்டணத்தை உயர்த்தாமல் ரயில் பட்ஜெட் தாக்கல் செய்து புதிய வசதிகளைச் செய்வோம், விபத்தில்லா பயணத்துக்கு உத்தரவாதம் அளிப்போம்” என்று ரயில்வே அமைச்சர் இனி வெற்று வாக்குறுதிகளை அளிக்க வேண்டியதில்லை.
ரயில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்ற அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ரயில்வே துறையின் வளர்ச்சி, பராமரிப்பு அனைத்துமே வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. பட்ஜெட்டுக்குப் புறம்பாக, ரயில் கட்டணங்களைச் சீரமைப்பது என்ற பெயரில், சுமைகளை ஏற்றும் மறைமுக உத்திகள் கையாளப்பட்டுவருகின்றன. இந்த நிலையெல்லாம் மாறும் என்று எதிர்பார்க்கலாம்.
ரயில் கட்டணங்களைச் சீரமைப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லாமல் ரயில் பயணிகளின் நலனையும் ரயில் துறையின் வளர்ச்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு சுயேச்சையான நெறியமைப்பை ஏற்படுத்த வேண்டும். ரயில்வே துறையைச் சேவை நோக்கோடு நடத்துவதுடன் நல்ல வருவாய் தரும் நிறுவனமாகவும் மாற்ற வேண்டும். புதிய ரயில் பாதைகளையும் ரயில் சேவைகளையும் அறிமுகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; முக்கியமாக, இதுவரை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் போக்குவரத்து வசதி பெறாத பகுதிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். புதிய திசையில் இந்திய ரயில்வே பயணிக்க இம்முடிவு ஊக்கம் தர வேண்டும்!