தலையங்கம்

கொழுந்துவிட்டு எரியும் தீயில் வெளிப்படும் ஊழல்!

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் - அதிகாரிகள் மட்டத்தில் புரையோடியிருக்கும் ஊழலைப் பெரும் ஜ்வாலையாகக் கக்கியிருக்கிறது சென்னை தியாகராய நகரில் இயங்கிவரும் ‘தி சென்னை சில்க்ஸ்’கட்டிடத்தில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்து. சென்னை தி நகரின் வணிகப் பிராந்தியங்களில், குறிப்பாக ரங்கநாதன் சாலை, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பல வணிக வளாகங்கள் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டுபோல எவ்வித முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் பிரம்மாண்ட ராட்சதன்களாகக் கட்டப்பட்டு, இயங்கிவருகின்றன என்பதைப் பல்லாண்டு காலமாக ஊடகங்கள் எழுதிவருகின்றன.

சமூக நலச் செயல்பாட்டாளர்கள் பலரும் இதுகுறித்துத் தொடர்ந்து பேசிவந்திருக்கின்றனர். ஏராளமான சமயங்களில் நீதிமன்றத்தின் கதவுகளும் இது தொடர்பில் தட்டப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றமே அரசுக்கு இந்த அபாயத்தைப் பல தருணங்களில் சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறது. ‘காளான்போல், புற்றீசல்போல் விதிமுறை மீறி கட்டிடங்கள் பெருகிவருகின்றன. இதை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்கூட உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதுகுறித்தெல்லாம் அலட்டிக்கொண்டதே இல்லை. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் தருணத்தில் மட்டும், விதிமீறல்கள், அத்துமீறல்கள் என்ற வார்த்தைகளைக் குற்றமிழைப்பவர்களே உச்சரித்து, எதிரிகள் எங்கோ வெளியே இருப்பதுபோலப் பாவனை காட்டி, பொதுச் சமூகத்தின் மறதியைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் தவறுகளிலிருந்து தப்பிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

சென்னையில் 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களில் விதிமுறை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதுதொடர்பான வழக்கு ஒன்றில், இப்படியான 32,000 கட்டிடங்களில் விதிமீறல் பகுதிகள் இடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டால், அதன் மொத்த நிலப்பரப்பில் 10% திறந்தவெளி இடம் இருக்க வேண்டும், தீ விபத்துகள் நேரிட்டால் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்லப் போதிய இடம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மிகக் குறைந்த பாதுகாப்பு நெறிமுறைகளும்கூடக் கண்டுகொள்ளப்படவே இல்லை.

விளைவு என்னவென்றால், புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்ட அக்கட்டிடத்தில் 100 தண்ணீர் லாரிகள், 25 தீயணைப்பு வாகனங்கள், 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் என்று ஒரு பெரும் படையே முயன்றும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால், கட்டிடத்தின் கட்டுமானம் அப்படியானதாக இருந்திருக்கிறது.

“விபத்து நேரிட்ட ‘சென்னை சில்க்ஸ்’ கட்டிடத்துக்கு நான்கு தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், எட்டு மாடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவின்பேரில் அவை இடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்தத் தளங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன” என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. இது எதுவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தெரியாது அல்லது இதில் ஆட்சியாளர்களின் பங்கு துளியும் கிடையாது என்பதை ஒரு குழந்தைகூட நம்பாது.

அந்த முறைகேடான கட்டிடத்தின் கட்டுமானமும் எந்த அளவுக்குப் பாதுகாப்பைப் பொருட்படுத்தாததாக அமைந்திருக்கிறது என்பதற்குத் தீயை அணைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது கிடைத்த அனுபவம் ஓர் உதாரணம். இந்தச் சம்பவம் நடந்ததற்கு முதல் நாள்தான், சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு 61-வது முறையாகக் கூடி விவாதித்திருக்கிறது. ஆனால், குழுவில் இடம்பெற்றிருக்கும் அரசு அதிகாரிகள் பலர் அதில் கலந்துகொள்ளவில்லை. தியாகராய நகர் பகுதியில் மட்டும் 62 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருக்கிறது; எனினும், அரசின் உயர் மட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதால், நடவடிக்கை எடுப்பதில் பெரிய அளவில் தயக்கம் காட்டப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது?

தீமையின் இடையிலும் ஒரு நன்மையாக, நல்ல வேளையாக, பகல் நேரத்தில் - கடை செயல்படும் நேரத்தில் விபத்து நேரிடவில்லை; ஆயிரக்கணக்கானோர் கூடும் இடத்தில், அப்படி ஒரு நேரத்தில் விபத்து நேரிட்டிருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. மக்களின் கவனத்தைப் பெரிய அளவில் இந்த விபத்து குவித்திருப்பதன் விளைவாக “கட்டிடத்தை இடிப்போம், நடவடிக்கைகள் எடுப்போம்” என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கின்றனர் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும். போதாது.

இப்படி வெடிக்கக் காத்திருக்கும் எல்லாக் கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை வேண்டும். அந்தக் கட்டிடங்களின் உரிமையாளர்கள் - கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும். இதற்குக் காரணமான ஊழல் அதிகாரிகள் ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை வேண்டும். இந்த ஊழலுக்குப் பின் நிற்கும் ஆட்சியாளர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்!

SCROLL FOR NEXT