தலையங்கம்

பாதுகாப்புக்கு எது ஆபத்து?

செய்திப்பிரிவு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுப் பிரிவின் உயர் அதிகாரி ராஜீந்தர் குமார் உள்பட 4 பேர்மீது, இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

அரசியல் தலைவர்களின் கட்டளைப்படி, காவல் துறை உயர் அதிகாரிகள் சட்ட விரோதமாக மேற்கொள்ளும் கொலை நடவடிக்கைகள்தான் 'என்கவுன்டர்கள்' என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி வருகிறது. கொல்லப்பட்டவர்கள் நல்லவர்களா, சமூக விரோதிகளா என்பதைப் பொறுத்து இந்தச் செயலை ‘சரி’, ‘தவறு’ என்று கூறுவது சரியல்ல. சட்டப்படியான ஆட்சி என்று கூறிவிட்டு, குற்றவாளிகளைத் தண்டிக்கச் சட்டங்களையும் நீதிமன்றங்களையும் உருவாக்கிவிட்டு, என்கவுன்டர்களை நாகரிக சமுதாயத்தில் அனுமதிக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இதிலெல்லாம் அந்தந்த மாநிலக் காவல் துறையின் கீழ்நிலை அதிகாரிகள்தான் இதுவரை ஈடுபட்டுவந்ததாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

முதல்முறையாக உளவுப்பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரியின்மீது போலி என்கவுன்டர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகையையும் தாக்கல்செய்துவிட்டது. சி.பி.ஐ-யின் இந்தச் செயலை, உளவுத் துறைமீது அதற்குள்ள தொழில்ரீதியான பொறாமை காரணமாகச் செய்த செயல் என்று கூறிவிட முடியாது. குஜராத் மாநிலக் காவல் துறை அந்த நான்கு பேரைக் கொன்றிருக்கலாம். ஆனால், அதற்கான ஆணை, டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவின் தலைமையகத்திலிருந்து வந்தது என்றும்கூட ஒரு கருத்து நிலவுகிறது. கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும், தேசநலன் கருதியே அதிகாரிகள் அவர்களைக் கொன்றார்கள் என்றும் வைத்துக்கொண்டாலும் சட்டத்துக்குப் புறம்பாக இப்படி அதிகாரிகள் நடப்பதை அனுமதிக்கவே முடியாது. உண்மையிலேயே துப்பாக்கிச் சண்டை நடந்திருந்தால் அது வேறு கதை. விசாரணைக்காகப் பிடித்துச் சென்று, தங்களுடைய காவலில் சில நாள்கள் வைத்திருந்துவிட்டு, பிறகு சுட்டுக்கொல்வதும் அதை வேறுவிதமாக நம்ப வைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

கீர்த்தி சக்ரா விருது பெற்றவரும், உளவுப்பிரிவின் முன்னாள் இயக்குநருமான அஜீத் டோவல், “பாகிஸ்தானிய உளவாளியைக் கொன்றதற்காகவும், பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் - வழக்கு எதையும் பதிவுசெய்யாமலேயே - சிலரைக் காவலில் வைத்து விசாரித்ததற்காகவும், சர்வதேச எல்லைக்கு அப்பால் கடத்தலைச் செய்ததற்காகவும் இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அதாவது, இந்தப் புலனாய்வுப் பிரிவின் வேலையே பல சமயங்களில் சட்டவிரோதமான காரியங்களைச் செய்வதுதான். உலகின் பல நாடுகளில் இதுதான் கதை. இந்தியாவிலோ இந்த அமைப்பு முறையாகச் செயல்படுவதற்கென்று உரிய சட்டக் கண்காணிப்பு இல்லாததால், அதிகாரிகள் தங்களுடைய மனப்போக்கில் செயல்பட்டுவருகின்றனர்.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் கூடாது என்று எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கூறினாலும் ஆட்சிக்கு வந்தவுடன் அதைப்பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்கின்றனர். இந்நிலை நீடித்தால், உளவுப்பிரிவு அமைப்புகளே அழிய நேரிடும், அது தேசத்தின் பாதுகாப்புக்கு மேலும் ஆபத்தாகிவிடும். இவை முறையாகச் செயல்படவும், சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

SCROLL FOR NEXT