தலையங்கம்

திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துங்கள்!

செய்திப்பிரிவு

ஆர்ப்பாட்டமாகப் பேசப்பட்ட ‘பிரதம மந்திரி ஜன் தன் திட்டம்’ தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.

இந்நிலையில், இத்திட்டத்தின் பயனாளர்களான ஏழைகள் பலர் தங்கள் கணக்கில் இருப்பு எதையும் வைக்க முடியாமல் சுத்தமாகத் துடைத்து எடுத்துவிடுகிறார்கள். கணக்கில் பணம் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக சில வங்கிகளில், வங்கி அதிகாரிகளே ஒவ்வொரு கணக்கிலும் தலா ஒரு ரூபாய் போட்டு வைத்திருக்கிறார்கள் என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இரண்டே ஆண்டுகளில் புதிதாக 24 கோடிப் பேர் வாடிக்கையாளர்களாகியிருப்பது ஒரு சாதனை என்பதில் சந்தேகமில்லை. மேலும், எல்லோருமே வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் மொத்தமாக எடுத்துவிடவில்லை. தங்கள் வங்கிக் கணக்கில் கணிசமான பேர் பணம் போட்டும் இருக்கிறார்கள். அப்படிப் பலர் சேமித்த தொகை மட்டும் ரூ.42,500 கோடி. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, இந்த வங்கிக் கணக்கு மூலம் ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற பயனுள்ள திட்டங்களை அரசு சிந்திக்க வேண்டும். வங்கிகளுக்கு வருவாயைத் தரும் வரப்பிரசாதமாகவும் இத்திட்டத்தை மாற்ற வேண்டும்.

ஏழைகள் என்றாலே கடன் பெறத் தகுதியற்றவர்கள், கடன் கொடுத்தாலும் திருப்பிக் கட்ட மாட்டார்கள் என்ற மனோபாவம் பலரிடமும் இருக்கிறது. இது வங்கி நிர்வாகிகளுக்கும் இருப்பதில் வியப்பு இல்லை. சாலையோரக் கடை வியாபாரிகள் போன்றவர்களிடம் நேர்மையும் நம்பகத்தன்மையும் இருப்பதை தனியார் லேவா தேவிக்காரர்கள் உணர்ந்த அளவுக்கு வங்கித் துறையினர் உணராதது சாபக்கேடு. இந்த நிலைமை மாற வேண்டும். ஏழைகள் அரசு வங்கிகள் மூலமே, தங்களால் திருப்பிச் செலுத்தும் அளவுக்குக் கடன் பெற திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். ‘ஜன சுரக்ஷா பீம யோஜனா’, ‘ஜீவன் ஜோதி பீம யோஜனா’, ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’என்று மத்திய அரசு வடிவமைத்துள்ள எளிய திட்டங்களைப் போல புதிய கடன் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நிபந்தனைகள் தொடங்கி விண்ணப்பப் படிவம் வரை அனைத்துமே எளிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஜன் தன் கணக்கு வாடிக்கையாளர்கள் பலன் பெற முடியும். இப்போதைக்கு அரசின் மானியங்களையும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களில் கிடைக்கும் வருவாயையும் அளிக்க இந்த ஜன் தன் கணக்குகள் உதவுகின்றன.

எந்தத் திட்டமும் தொடங்கிய நிலையிலேயே மிகப் பெரிய வெற்றிபெற்றுவிடுவதில்லை. இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்களை அதிகாரிகள் ஆராய்ந்து இதைப் பலனுள்ள சாதனமாக மாற்ற வேண்டும். பெரும்பாலான மக்கள் நிதியாதாரத்துடன் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கினால் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பெரிய வெற்றிகளைப் பெறும்!

SCROLL FOR NEXT