தலையங்கம்

அரசியல் சாமானியர்களுக்கு அல்ல?

செய்திப்பிரிவு

ஆட்சிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் அவசர அவசரமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள், விவாதத்துக்கே வாய்ப்பில்லாமல் செய்துவிடுகின்றன. பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், சிதைந்த தன்னுடைய பிம்பத்தைக் கடைசி சில வாரங்களில் மீட்டெடுக்க முடியும் என்று காங்கிரஸ் நம்புவது பரிதாபமாக இருக்கிறது.

தேர்தல் செலவுகளுக்கான உச்சவரம்பை உயர்த்தும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்படி, மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் மக்களவைத் தொகுதி வேட்பாளரின் தேர்தல் செலவு ரூ. 40 லட்சத்திலிருந்து ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவா உள்ளிட்ட சிறிய மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவு ரூ. 22 லட்சத்திலிருந்து ரூ.54 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் செலவு உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு பெரிய மாநிலங்களில் ரூ. 28 லட்சமாகவும் சிறிய மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் ரூ. 20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் இப்படி உச்சவரம்பைப் பரிந்துரைப்பதும் அரசு அதைப் பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பதும் வழக்கம்தான். எனினும், ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த அளவுக்கு நம்முடைய தேர்தல் அரசியல் இந்த நாட்டின் சாமானியர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது?

தேர்தல் ஆணையக் கணக்கைக் காட்டிலும் பல மடங்கு தொகை தேர்தலுக்காகச் செலவழிக்கப்படுவதும் கணக்கிலிருந்து அவை மறைக்கப்படுவதும்தான் நம் நாட்டின் யதார்த்தம். என்றாலும்கூட, தவறுகள் கள யதார்த்தம் என்பதாலேயே அவற்றைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாது, அல்லவா?

அரசின் இந்த உச்சவரம்பு உயர்வு பெரும்பாலான முக்கியக் கட்சிகளுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனென்றால், இந்த விஷயம்குறித்து விவாதிக்கத்

தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியபோதே, ஆம் ஆத்மி கட்சி மட்டுமே உச்சவரம்பு உயர்வுக்கு எதிராகக் குரல்கொடுத்தது.

பொதுவாக, தேர்தல் ஆணையம் இப்படித் தேர்தல் செலவு உச்சவரம்பை உயர்த்தும்போதெல்லாம், அதை ஆதரிப்பவர்கள் முன்

வைக்கும் வாதம், தேர்தல் செலவுகளை இந்த உயர்வு வெளிப்படையாக்க உதவும் என்பதே. ஆனால், உண்மையாகவே எந்த அளவுக்குத் தேர்தல் செலவு உச்சவரம்பு நம்முடைய தேர்தல் செலவை வெளிப்படையாக்க உதவியிருக்கிறது என்று திரும்பிப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதல் பொதுத்தேர்தலின்போது செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ. 10.4 கோடி. இதில் சரிபாதி செலவு அரசினுடையது. ஆனால், 15-வது மக்களவையில், ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாகச் சொத்து வைத்திருப்பவர்கள் வெறும் 17 பேர்தான்.

சாமானியர்களை அரசியலைவிட்டு விரட்டும் வேலையை அதிகாரபூர்வமாகவே செய்கிறோம் என்று தோன்றுகிறது!

SCROLL FOR NEXT