உத்தரப் பிரதேசத்தில், முலாயம் சிங் யாதவ் குடும்பத்தில் வெறும் பூசலாகத் தொடங்கிய குடும்பச் சண்டை, இன்றைக்கு சமாஜ்வாதி கட்சியையே இரண்டாகப் பிளக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச நினைக்கிறார் முதல்வர் அகிலேஷ் யாதவ். தந்தை முலாயம் சிங் யாதவின் ஆலோசகர்களாகவும் உற்ற ஆதரவாளர்களாகவும் திகழும் மூத்த தலைவர்கள் மீதும் அவர் கரம் நீளும்போது, கட்சி உடையும் சூழல் உருவாகியிருக்கிறது.
முக்தார் அன்சாரி தலைமையிலான ‘குவாமி ஏக்தா தள்’ கட்சியை சமாஜ்வாதியுடன் இணைப்பதை அகிலேஷ் கடுமையாக எதிர்த்ததில் தொடங்கியது மோதல். குற்றப் பின்னணி உள்ள அன்சாரியின் கட்சியை இணைத்துக்கொள்வதால், மக்களுக்குத் தன் கட்சியின் மீதுள்ள நல்லெண்ணம் போய்விடும் என்பது அகிலேஷின் வாதம். ஆனால், தேர்தல் சமயத்தில் முக்தார் அன்சாரியை உள்ளே இழுத்தால், கூடுதல் பலன் கிடைக்கும் என்று நினைத்தார் முலாயம். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர் சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டதையும் அகிலேஷ் எதிர்க்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது, அகிலேஷ் தரப்பு நியாயங்கள் எல்லாமும் பொது நியாயங்களாகத் தெரிந்தாலும், உள்ளளவில் அப்படியில்லை. சமாஜ்வாதியின் எதிர்கால முடிவுகளை எடுப்பது தானாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே அதில் மேலோங்கியிருக்கிறது என்கிறார் முலாயம். அகிலேஷால் இன்று கைகழுவப்படுபவர்களே கட்சியை இதுவரையில் இவ்வளவு உயரத்துக்கு உயர்த்தியவர்கள். தனக்கு உதவியாக இருந்தவர்கள் என்கிறார் முலாயம்.
உண்மையில், குடும்பத்துக்குள் ஏராளமான அதிகார யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு அதிகார மையமாகச் செயல்படுகின்றனர். கட்சியைப் பல பிளவுகளாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர். “புதிய தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும், அரசு நிர்வாகத்தைச் சீர்ப்படுத்த வேண்டும், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும்” என்றெல்லாம் அகிலேஷ் அடிக்கடி பேசினாலும், ஓரளவுக்கு மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுசேர்த்திருக்கிறார் என்பதைத் தவிர, கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. குடும்ப அரசியலே இதற்குக் காரணம். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நல்லிணக்கம் இல்லாமல் போனதற்கு அகிலேஷை முழுப் பொறுப்பாளியாக்க முடியாது என்றாலும், ஒரு முதல்வராக அவரும் கூட்டுப் பொறுப்பை ஏற்றுதான் ஆக வேண்டும்.
இப்போது விவகாரம் முற்றிவிட்ட நிலையில், அடுத்த மாதம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளோடு வாளைச் சுற்றுவதற்குப் பதிலாகத் தன் கட்சிக்குள்ளேயே வாள் சுற்றிக்கொண்டிருக்கிறார் அகிலேஷ். நாட்டின் பெரிய மாநிலத்தை ஆளும் முதல்வரின் குடும்பத்தில் நடக்கும் சண்டையால் நாடே சிரிக்கிறது. சமாஜ்வாதி கட்சிக்கு மட்டும் அல்ல; குடும்ப அரசியலின் பிடியில் வீழ்ந்திருக்கும் பெரும்பான்மை இந்திய அரசியல் கட்சிகளுக்கு உத்தரப் பிரதேச இன்றைய சூழல் ஒரு பாடம்!