தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் முக்கியப் பிரச்சினைகளில் மின்வெட்டும் ஒன்று. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம். தமிழ்நாட்டில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் ‘டான்ஜெட்கோ', மின்சாரத்தை அதிகம் நுகர்வது சென்னைதான் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் சமீபத்தில் உறுதிப்படுத்தியிருப்பது நம் அச்சத்தை அதிகப்படுத்துகிறது.
“மாநிலத்தின் மொத்த மின்னுற்பத்தியில் 37% தொழில்துறையால் நுகரப்படுகிறது. வீடுகளில் மின்நுகர்வு 23%-லிருந்து 30% ஆகவும், வேளாண்துறையின் நுகர்வு 27%-லிருந்து 18% ஆகவும் குறைந்து விட்டது. சாகுபடி பரப்பளவு குறைந்ததால் விவசாயத்துக்கான மின்சாரத் தின் தேவை குறைந்திருக்கிறது. வணிகப் பயன்பாட்டுக்கு 11.50% மின்சாரம் நுகரப்படுகிறது” என்று தமிழ்நாடு மின்சாரப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் எஸ். காந்தி தெரிவிக்கிறார். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும்தான் இருக்கின்றன என்பதோடு மேற்கண்ட தரவுகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும். சென்னையின் மின்தேவை அதிகரித்துக்கொண்டே வந்தாலும் மாநிலத்தில் மின்தேவை குறைந்துகொண்டே வருகிறது. விவசாயத் துறையின் வீழ்ச்சியையும் தொழில்துறையில் உற்பத்தி முழு அளவில் நடைபெறவில்லை என்பதையும் இது உணர்த்துகிறது. எனவே, தமிழக அரசு உடனே கவனம் செலுத்த வேண்டியது வீடுகளில் அதிகரித்துவரும் மின்சார நுகர்வுமீதுதான்.
விளக்குகள், மின் விசிறிகள் மட்டுமே இருந்த வீடுகளில் இப்போது குளிர்சாதனக் கருவியிலிருந்து, கணினிவரை பல்வேறு வகையான சாதனங்களும் இடம்பிடித்துவிட்டன. இதனால் மின்னுற்பத்திக்கும் மின்தேவைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்குத் தீர்வுதான் என்ன? முதல்வர் ஜெயலலிதா, சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புத் திட்டத்தைத் தமிழகத்தில் தொடங்குவதுதான் இதற்கான தீர்வு. முதல் படியாக, வீடுகளில் மின்சாரத் தயாரிப்புக்கு முன்வருவோருக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் எளிதில் கிடைக்கவும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வீடுகளின் மின்சாரத் தேவைகளில் கணிசமான அளவு பூர்த்தி செய்யப்பட்டாலே தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை தீர்ந்துவிடும். இப்போது ஒரு சில நிறுவனங்களே சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து விளம்பரம் செய்கின்றன. அரசு இவற்றை ஒருங்கிணைத்து, தரமான சூரிய ஒளித்தகடுகளைப் பயன்படுத்த வலியுறுத்தினால் மின்னுற்பத்தியும் அதிகரிக்கும்.
விவசாயத்துக்கும் குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அரசு தொடரட்டும். அதேவேளையில், மின்திருட்டைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய சொந்தத் தேவைகளுக்காக மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்வதற்காகக் கொண்டுவரும் திட்டங்களையும் அரசு ஆதரிக்க வேண்டும். அவற்றிடமிருந்து உபரியை வாங்கவும் முன்வர வேண்டும். தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் சிறிய அளவிலாவது மின்னுற்பத்தி நிலையங்களைத் தனியார் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். மேலும், காற்றாலை, அனல், புனல் மின்நிலையங்கள் ஆகியவற்றுடன் சூரிய ஒளி மின்னுற்பத்தியும் இணைந்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாவது உறுதி