தலையங்கம்

பிரதமரே முடிவுகட்டுங்கள் காட்டுமிராண்டி பஞ்சாயத்துக்கு!

செய்திப்பிரிவு

இன்னும் எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் நம் சமூகத்தில் உறைந்திருக்கிறது என்பதை உக்கிரமாக வெளிப்படுத்தி யிருக்கிறது, மேற்கு வங்கத்தின் சுபல்பூரில் நடந்திருக்கும் பாலியல் வன்முறை.

சுபல்பூர், பழங்குடி இன மக்கள் வாழும் ஒரு சின்ன கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ஓர் இளம்பெண், தன் சமூகத்தைச் சேராத ஓர் இளைஞனைக் காதலித்திருக்கிறார். இது தெரியவந்ததும் கிராமப் பஞ்சாயத்தாரின் முன் நிறுத்தப்பட்ட அந்தப் பெண்ணை விசாரித்த பஞ்சாயத்துத் தலைவர், அந்தப் பெண்ணை எல்லோருக்கு முன்பும் கடுமையாகப் பேசி இழிவுபடுத்தியதுடன் அவர் செய்த ‘தவறு’க்காக ரூ.25,000 அபராதமும் விதித்திருக்கிறார். வறிய நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்தபோது, இன்னொரு மாற்றுத் தண்டனையை அறிவித்திருக்கிறார் பஞ்சாயத்துத் தலைவர். அதே இனத்தைச் சேர்ந்த ஆண்கள் பலர், அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதுதான் மாற்றுத் தண்டனை. இதன்படி 12 பேரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான சூழலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த விஷயம் வெளியே வந்திருக்கிறது. ஊடகங்கள் விஷயத்தைக் கையில் எடுத்து, சம்பந்தப்பட்டோர் கைதுசெய்யப்பட, இப்போது அந்தப் பெண்ணின் குடும்பத்தையே கிராமம் ஒதுக்கிவைத்திருக்கிறது.

நம் நாட்டில் இத்தகைய சம்பவங்கள் புதிதல்ல. கடந்த ஆண்டுகூட ஹரியாணாவின் துவா கிராமத்தில் நிலச்சுவான்தார்கள் கும்பலால் 13 வயதுச் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதும், விஷயத்தைக் காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்று கிராமப் பஞ்சாயத்து தடை விதித்ததன் விளைவாக அந்தச் சிறுமி அவமானத்தில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டதும் நடந்தது. ஆனால், இப்படியான சம்பவங்கள் ஊடகங்களில் விவாதிக்கப்படுவதைத் தாண்டி சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் உருவாக்குவதில்லை என்பதுதான் துயரம்.

இந்தியாவில் 2.65 லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களில் இப்படிப்பட்ட சட்ட விரோத கிராமப் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. நகரங்களிலும்கூட அந்தந்தச் சமூகம் சார்ந்து இப்படிப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. ஆணாதிக்கத்தில் வேர்விட்டு, சாதி, மதம், இனம் எனப் பல்வேறு கிளைகளுடன் சூழ்ந்திருக்கும் இந்த அமைப்புகள், அசைக்க முடியாத செல்வாக்குடன் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஓட்டு அரசியல் மற்றும் இன வெறி காரணமாக உள்ளூர் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இந்த அமைப்புகளைப் பாதுகாக்கவே முயல்கின்றனர். விளைவு, ஒவ்வோர் ஆண்டும் எண்ணற்ற உயிர்களும் கனவுகளும் மண்ணோடு மண்ணாக்கப்படுகின்றன.

இது ஒரு தனிநபர் அல்லது ஓர் ஊர் சார்ந்த பிரச்சினை அல்ல. அரசு உண்மையாகவே இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்தால், இதுபோன்ற அமைப்புகளை ஒட்டுமொத்தமாக சட்ட விரோத அமைப்புகளாக அறிவிக்க வேண்டும்; கடுமையான பிரத்யேகச் சட்டங்களை உருவாக்கி, ஒட்டுமொத்தமாகக் களை எடுக்க வேண்டும்!

SCROLL FOR NEXT