காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கோரி பெங்களூருவில் கருத்தரங்கம் நடத்திய ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்தியக் கிளை மீது, 124-ஏ சட்டப் பிரிவின் கீழ் பெங்களூரு போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்திருப்பது, தேசத் துரோகச் சட்டத்தின் அராஜகத் தன்மையையும், அதைப் பயன்படுத்தி நடத்தப்படும் துன்புறுத்தல்களையும் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்தியச் சட்டங்களில் இப்படியும் ஒரு சட்டம் இடம்பெற்றிருப்பதன் அபாயத்தை இந்தச் சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது. “இச்சட்டம் கடும் ஆட்சேபத்துக்குரியது; அருவருப்புக்குரியது” என்று நேருவே குறிப்பிட்டிருக்கிறார். வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலோ நடந்துகொள்ளும் சமயங்களில்தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது 124-ஏ சட்டப் பிரிவைப் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி இருந்தாலும், மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் ஒடுக்குவதற்காக இச்சட்டம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியவில்லை.
துரதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவில் பேசப்படும் தேசத் துரோக வழக்குகள் மீதுதான் பெரும்பாலும் அறிவுஜீவிகளும் ஊடகங்களும் கவனம் செலுத்துகின்றனர். தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் மீதும், தமிழக அரசின் மதுபானக் கொள்கையை விமர்சித்ததால் பாடகர் கோவன் மீதும், படேல் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி குஜராத்தில் அச்சமுதாயத்தினரை அணிதிரட்டிய ஹர்திக் படேல் மீதும், ஊழலுக்கு எதிரான கார்ட்டூன்களை வரைந்த அசீம் திரிவேதி மீதும் தேசத் துரோக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டபோதெல்லாம், ஊடகங்களும் அறிவுஜீவிகளும் குரல் கொடுத்தனர். ஆனால், தேசத் துரோகச் சட்டம் முழுமையாகவே தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் பலர் பார்வைக்கு வருவதில்லை.
2014-ல் மட்டும் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கிட்டத்தட்ட 58 பேர் கைது செய்யப்பட்டிருப்பது கவலை தரும் விஷயம். வார்த்தைகள், சைகைகள் மூலம் வெறுப்பையோ அவமதிப்பையோ வெளிப்படுத்தினாலோ அல்லது அரசுக்கு எதிராக அதிருப்தியைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்டாலோ சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வகைசெய்யும் 124-ஏ சட்டப் பிரிவு, குழப்பமான, அபாயமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 1860-ல் இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காகவே காலனிய அரசு கொண்டுவந்த சட்டப் பிரிவு இது. இதன்கீழ் இன்றைக்கும் பலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்படுவது வெட்ககரமானது.
1962-ல் கேதார்நாத் சிங் வழக்கில், ‘அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரான வகையில், சட்டப் பிரிவு 124-ஏ பயன்படுத்தப்படக் கூடாது’என்று கூறிய உச்ச நீதிமன்றம், நேரடியாகப் பெரும் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு, அல்லது பொது அமைதிக்குப் பெருமளவில் ஆபத்து ஏற்படுத்துகிறவர்களுக்கு எதிராக மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. உண்மையில், சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே இந்தச் சட்டத்தை நீக்கியிருக்க வேண்டும். ஆனால், இந்தியா அதைச் செய்யத் தவறிவிட்டது. பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள், தேசத் துரோகச் சட்டத்தை நீக்கிவிட்டன. அந்நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய வேண்டிய நேரம் இது!