தலையங்கம்

எல்லையில் அமைதி தேவை

செய்திப்பிரிவு

இந்திய - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (டி.ஜி.எம்.ஓ.) அந்தஸ்தில் உள்ள இரு நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியிருப்பது வரவேற்கத் தக்கது. பிரதமர்கள் மன்மோகன் சிங், நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, இதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன.

1998-க்குப் பிறகு, இரு நாடுகளின் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இப்போதுதான் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தியத் தரப்பில் லெப். ஜெனரல் வினோத் பாட்டியா தலைமையிலான உயர் அதிகாரிகள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகாவுக்குச் சென்றனர். அங்கு மேஜர் ஜெனரல் ஆமிர் ரியாஸ் தலைமையில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை வரவேற்று, இரண்டரை மணி நேரம் பேசியிருக்கின்றனர். சுமுகமாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இருதரப்பும் ஏற்றுக்கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இருதரப்பும் சண்டையிடக் கூடாது என்று 10 ஆண்டுகளுக்கு முன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடரும். ஏதாவது பிரச்சினை என்றால், ‘ஹாட்-லைன்’உள்ளிட்ட தகவல்தொடர்பு அமைப்புகள் மூலம் இருதரப்பு உயரதிகாரிகளும் உடனடியாகப் பேசுவார்கள். மாடு மேய்க்கிறவர்கள், விறகு – சுள்ளி சேகரிப்பவர்கள் போன்ற அப்பாவி குடிமக்கள் தவறிப்போய் இருநாட்டு எல்லைகளைக் கடந்து வந்துவிட்டால், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவரவர் ஊருக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று இருதரப்பு அதிகாரிகளும் முடிவுசெய்துள்ளனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியிலேயே உள்ள யூரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பிரிகேட் கமாண்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நிலையில் அடுத்தடுத்து மீண்டும் சந்தித்துப் பேசவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றுள்ள நிலையில் இருநாட்டு ராணுவமும் மோதிக்கொள்வது ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் இருதரப்புக்கும் பெருத்த இழப்பை ஏற்படுத்தும். எந்த நாடாக இருந்தாலும் போரைத் தவிர்க்கவே முன்னுரிமை தரப்பட வேண்டும். பசி, பிணி ஆகியவற்றால் மக்கள் வாடும்போது, நாட்டின் அரிய செல்வ வளங்களை அவர்களுடைய முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டிய கடமை எல்லா அரசுகளுக்கும் இருக்கிறது. இந்தியா மிகப் பெரிய நாடாக இருந்தாலும், தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்தும் ஆக்கிரமிப்பு எண்ணம் அதற்கு எப்போதுமே இருந்ததில்லை. இதை உணர்ந்துள்ள பாகிஸ்தான், இந்தியாவை எதிரி நாடாகவே பார்க்காமல் தோழனாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் ராணுவமே நெடுங்காலமாக ஆட்சியில் இருந்ததால் மக்களாட்சியின் மகத்துவமோ, மக்கள் நல அரசாகச் செயல்பட வேண்டியதன் அவசியமோ அவ்வளவாக உணரப்படவில்லை. இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் பாகிஸ்தானியர்கள் இந்தியர்களுடன் நல்லுறவையே விரும்புகிறார்கள். கல்வித் துறையில் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைத் தாங்களும் அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தியாவின் தொழில்வளமும், விவசாய வளர்ச்சியும் பாகிஸ்தானிலும் சாத்தியம் என்பதால், இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவுகொள்வதே பாகிஸ்தானுக்கு எல்லா விதத்திலும் நன்மைகளைத் தரும். இரு நாட்டு வியாபாரிகளும் இதைச் சமீபகாலமாக உணர்ந்துவருகிறார்கள்.

மத அடிப்படைவாதக் குழுக்களின் கெஞ்சலுக்கோ மிரட்டலுக்கோ ஆட்பட்டு, அவர்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவ அனுமதிக்கும் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் இனியும் துணைபோகக் கூடாது. இந்தச் சந்திப்பும் பேச்சுவார்த்தையும் அதற்கு வித்திட்டால், ஆசியத் துணைக் கண்டம் அமைதியை நோக்கி முன்னேறும். ஈரானில் ஆட்சித் தலைமையின் மனமாற்றம் அங்கு கொந்தளிப்பைத் தணித்ததுபோல இந்திய, பாகிஸ்தான் எல்லையிலும் பீரங்கிகளின் சத்தம் ஓய வேண்டும்.

SCROLL FOR NEXT