தலையங்கம்

நடிகை எனும் சக மனுஷி

செய்திப்பிரிவு

இரண்டு நிகழ்வுகள். நாம் இன்னும் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வியை வலுவாக எழுப்புகின்றன.

முதல் நிகழ்வு, ஒரு திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் அமைப்பின் செயலரான ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு. ‘ஊர்ச்சுற்றிப் புராணம்’ படத்தின் படப்பிடிப்பு பாதி மட்டுமே நிறைவடைந்திருக்கும் நிலையில், படத்தின் நாயகியான அஞ்சலி தலைமறைவானது தொடர்பாகப் பேசிய ஜாக்குவார் தங்கம், ‘‘இனி, அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்துகொண்டார் என்றால், அவரைச் செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டோம். இந்தப் பிரச்சினைக்கு இன்றே தீர்வு காணக் களம் இறங்குவோம். அஞ்சலி எங்கிருந்தாலும் அவரைக் கட்டித் தூக்கி வந்து, அந்தப் படத்தில் நடிக்க வைப்போம்’’ என்று பேசியிருக்கிறார். தன்னுடைய இந்தப் பேச்சின் ஊடாக, ‘‘இந்த அமைப்பின் செயலாளராக இருக்கும் நான், தற்போதைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினர் என்கிற பொறுப்புடனேயே பேசுகிறேன்’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஜாக்குவார் தங்கம்.

இரண்டாவது நிகழ்வு. கொல்லம் பகுதியில் நடந்த படகுப் போட்டிக்குச் சென்ற கேரள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பீதாம்பர குரூப் மீதான, நடிகை ஸ்வேதா மேனனின் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு. முதலில், ஸ்வேதா மேனனின் குற்றச்சாட்டை, ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று மறுத்தார் 71 வயது பீதாம்பர குரூப். தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் ஸ்வேதா மேனனை பீதாம்பர குரூப் தொடவும் உரசவும் முற்படும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட சூழலில், ஸ்வேதா மேனனிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார் பீதாம்பர குரூப். ‘‘ஒரு பெண்ணாக, சிறுமைப்படுத்தப்பட்டதாகவும் அவமதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார், ஒரு குழந்தையின் தாயான ஸ்வேதா மேனன். நம் சமூகத்தில், இத்தகைய நிகழ்வுகள் ஏன் திரும்பத் திரும்ப நடக்கின்றன; பெயர்கள் மட்டுமே மாறுகின்றன. ஆனால், பரபரப்பை உருவாக்கும் அளவுக்கு, அவை அதிர்ச்சியை உண்டாக்குகின்றனவா? இல்லை. ஏன்?

ஏனென்றால், நமக்கு இது சகஜம். ஒரு சமூகம் தன்னையே அறியாமல், அதன் ஆழ்மனத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், மதிப்பீடுகள், பார்வைகளைச் ‘சமூக நனவிலி மனச் செயல்பாடு’ என்று சொல்வார்கள் மனவியல் நிபுணர்கள். நம்முடைய சமூக நனவிலி மனச் செயல்பாட்டில் ஆணாதிக்கம் அப்படித்தான் உறைந்திருக்கிறது. பெண்கள் மீதான கீழான பார்வை, மதிப்பீடு, நம்பிக்கை சகலமும் அங்கிருந்தே உற்பத்தியாகின்றன. எல்லாவற்றையும் ‘சகஜம்’ஆக்குவது அதுதான். மேலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன் குரூரப் பற்களை நீட்டவும் சொல்கிறது.

நாம் உணர்கிறோமா? எனில், எப்போது விடுபடப்போகிறோம்?

SCROLL FOR NEXT