நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது மத்தியப் புள்ளிவிவர அலுவலகம். அதன் அடிப்படையிலான ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜி.டி.பி.), ஒட்டுமொத்த மதிப்பு சேர்ப்பு (ஜி.வி.ஏ.) மதிப்பீடுகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைகிறது என்றே சொல்கின்றன. கடந்த ஆண்டின் வளர்ச்சி வீதம் 7.6%. இது 7.1% ஆகக் குறையும். ஒட்டுமொத்த மதிப்புச் சேர்ப்பு கடந்த ஆண்டு 7.2%. இந்த ஆண்டில் 7% ஆகக் குறைகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட தொய்வு இதில் சேர்க்கப்படவில்லை.
கனிமம் - சுரங்கம் வெட்டுதல் துறையில் 1.8% உற்பத்தி குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இது 7.4% வளர்ச்சி கண்டது. மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வழங்கல், இதர பயன்பாட்டுச் சேவைகள் துறையில் 6.6%-லிருந்து 6.5% ஆகக் குறைவு. இவை பொருளாதார இயந்திரத்தின் கண்கள் போன்றவை. இவற்றின் வளர்ச்சிக் குறைவு அரசு எதிர்பார்த்ததைவிட அதிகம் என்பதே உண்மை.
அடுத்து வரும் காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையலாம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உற்பத்தியும், நுகர்வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த காலாண்டு கால ஆய்வுகளில் அது அதிகமாகத் தெரியும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரத்தில் குறுகிய காலத்துக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்கூட்டியே கூறியது. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலானபோதுதான் அதன் தீவிரத்தை உணர முடிந்தது. சில்லறை வணிகம், உணவு விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலா ஆகிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமைப்புசாராத் தொழிலாளர்கள் பாடுபடும் துறைகளில் அதிகமான பாதிப்பு. ஒரு புறம் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மறுபுறம் நுகர்வுக்குப் பணம் கிடைக்காததால், அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். கிராமப்புறங்களில் இது அதிகமாக உணரப்பட்டது.
நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளையும் தரவே செய்கின்றன தரவுகள். ரபி பருவத்துக்குத் தேவையான மழை இருந்தால் பொருளாதாரம் 8% முதல் 8.5% வரை உயரும் என்றார் நிதியமைச்சர். ரபி பருவத்துக்கான பருவமழை வழக்கமான அளவு இருந்தது என்கிறது மத்தியத் தகவல் அலுவலகம். வேளாண்மை, வன வளம், மீனளம் துறைகளில் இந்த ஆண்டில் 4.1% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இவற்றின் வளர்ச்சி வெறும் 1.2% தான்.
இந்த ஆண்டு ரபி பருவத்தில் 602.75 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைவிட இது 6.5% அதிகம். ரொக்கத் தட்டுப்பாட்டை விவசாயிகள் சமாளித்துவிட்டால், கிராமங்களில் குறைந்து வரும் நுகர்வு அதிகரிக்கும். அந்த நிலைமை ஏற்படாவிட்டால் அடுத்த மத்திய நிதிநிலை அறிக்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.