எந்த ஒரு எழுத்தாளரும் தனக்குரிய ஒரு வாசகரையாவது எப்படியும் அடைந்துவிடுவார். அதேபோல் ஒரு வாசகரும் தனக்குரிய எழுத்தாளரை எப்படியும் அடைந்துவிடுவார். ஆனால், இன்று தமிழ் எழுத்துலகில் இதில் ஒரு சமச்சீரின்மை நிலவுவதைக் காண முடிகிறது.
முன்பெல்லாம் ஒரு எழுத்தாளரை வாசகர்கள் தொடர்புகொள்வது அவ்வளவு எளிதல்ல. அன்றெல்லாம் பெரும்பாலான எழுத்தாளர்களுக்குச் சக எழுத்தாளர்கள்தான் நண்பர்களும் வாசகர்களும் விமர்சகர்களும். ஆனால், அச்சு ஊடகங்களின் பெருக்கத்துக்குப் பிறகு வாசகர்களை எழுத்தாளர்கள் சென்றுசேர்வதும் எழுத்தாளர்களுக்கு வாசகர்களின் கருத்துகள் சென்றுசேர்வதும் கணிசமாக அதிகரித்தன. இன்றைய இணைய யுகத்திலோ இந்த உறவு வேறு வகையில் பரிணாமம் அடைந்திருக்கிறது.
பெரும்பாலான எழுத்தாளர்கள் இன்று ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருக்கிறார்கள். இந்த இடங்களில் ஒரு எழுத்தாளர் தனது கருத்தையோ, தன் புதிய சிறுகதையையோ, கவிதையையோ, புதிய புத்தகம் குறித்த அறிவிப்பையோ வெளியிட்டால் உடனே நூற்றுக் கணக்கில் விருப்பக் குறிகள் இடப்படுகின்றன.
இப்படி உடனுக்குடன் கிடைக்கும் விருப்பக் குறி அவரது நூல்வடிவப் படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். மிதமான வேகத்தில் எழுதும் ஒரு எழுத்தாளர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் வெளியிட்டால் அந்தப் புத்தகத்தின் ஐநூறு பிரதிகள் விற்பதற்கு பத்தாண்டுகள்கூட ஆகின்றன. சமூக ஊடகங்களில் எழுத்தாளர் இடும் பதிவுக்குக் கிடைக்கும் ஆயிரம் விருப்பக் குறிகளைவிடவும் அவரது நூலின் ஒரே ஒரு பிரதியின் விற்பனை என்பது அர்த்தமுள்ளது.
புத்தகம் வாங்குவது ஒரு எழுத்தாளருக்கு நாம் காட்டும் தயவு அல்ல. நம்மை மேம்படுத்திக்கொள்ளும் செயல்பாட்டின் ஒரு பகுதிதான் புத்தகத்தை வாங்குவதும் அதைப் படிப்பதும். நம்மை மேம்படுத்தும் நூலாசிரியர்களுக்கு நாம் காட்டும் மரியாதைதான் அவருடைய புத்தகத்தை வாங்குவதும், நண்பர்களுக்கு அந்தப் புத்தகத்தைப் பரிந்துரைப்பதும்.
தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள் வாசகர்களைத் தேடித் தேடிச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. எழுத்தாளர்களை நோக்கி வாசகர்கள் வருவது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. புத்தகத்தின் பிரதான நோக்கம் வாசகரின் உலகை விரிவடையச் செய்வதுதானே தவிர, எழுத்தாளரின் பெருமையோ அவருக்கான வேறு பலன்களோ அல்ல. எனவே நூல்களைத் தேடி நாம் செல்ல வேண்டும்.
எழுத்தாளர்களின் சமூக ஊடகப் பதிவுகளுக்கு இடும் விருப்பக் குறிகளைவிட வாசிப்பின் மூலம் அவர்களது புத்தகங்களுக்கு அதிக அளவில் விருப்பக் குறிகளை இடும் பண்பாட்டை வளர்த்தெடுப்போம்.