தலையங்கம்

என்கவுன்டர்கள் எதன் அடையாளம்?

செய்திப்பிரிவு

குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் சமூக விரோதிகள், ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் போன்றவர்களை போலீஸார் என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொல்வதுகுறித்து, நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும், அத்தகைய என்கவுன்டர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் வெகுநாட்களாக ஒலித்துவருகின்றன.

இந்த நிலையில்தான், என்கவுன்டர்கள் நடந்தால் போலீஸ் என்ன செய்ய வேண்டும், மாநில அரசு என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிகளை வகுத்து அவற்றைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கீழ்க்கண்ட நெறிமுறைகளை அறிவுறுத்தியிருக்கிறது. ஒவ்வொரு என்கவுன்டருக்குப் பிறகும் நடுநிலையான விசாரணை முதலில் நடத்தப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 176-வது பிரிவு கூறுகிறபடி விசாரணை நடைபெற வேண்டும். என்கவுன்டரில் இறந்தவர் யார் என்பதை குற்ற விசாரணைப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸார் அல்லது என்கவுன்டர் நடந்த இடத்தைச் சேராத வேறு நிலைய போலீஸார் விசாரித்து உறுதி செய்ய வேண்டும். சம்பவ இடத்தில் காணப்படும் தடயங்களை அப்படியே பாதுகாக்க வேண்டும். கைவிரல் ரேகைப் பதிவுகளை எடுக்க வேண்டும். இறந்தவரின் உடலை மருத்துவப் பரிசோதனை செய்வதை வீடியோவில் படமாக எடுக்க வேண்டும். இறந்தவரின் உறவினருக்கு எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். மாஜிஸ்திரேட் மூலம் விசாரணை நடத்துவதுபோக, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அது மட்டுமின்றி, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் என்கவுன்டர் களிலும் இறந்தவர்கள் குறித்த தகவல்களை எல்லா மாநில அரசுகளும், 6 மாதங்களுக்கு ஒருமுறை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும்.

தண்டனை ஏதும் இல்லாமல், காவல் துறையினர் தப்பிவிடுவதைத் தடுப்பதும், அவர்களிடம் நடுநிலையான விசாரணை நடத்துவதும் மிகவும் கடினம். பயங்கரவாதிகளும், திட்டமிட்டுப் பெருங்குழுவாகச் செயல்படும் சமூக விரோதிகளும் போலீஸாரிடம் எளிதில் சிக்குவதில்லை என்னும்போது போலீஸாரின் செயல்பாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகிறது. ஆனால், அத்தகையவர்களையும் திறமையாகப் பிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்தவே போலீஸார் முயற்சி செய்ய வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம்.

என்கவுன்டர் ஆதரவாளர்களோ, “சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் எடுக்கும் நடவடிக்கைகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதாலும் தடுப்பதாலும் சமூகவிரோதிகள் ஊக்கம் பெறுகிறார்கள்” என்கிறார்கள். ஆனால், “என்கவுன்டர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், சமூகவிரோதி என்று முத்திரை குத்தி எவரை வேண்டுமானாலும் காவல் துறையினர் கொல்லக்கூடிய ஆபத்து இருப்பதால், இவற்றை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்” என்ற மனிதஉரிமை ஆர்வலர்களின் வாதத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடும் குற்றவாளிகளையெல்லாம் அப்படியே சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணமே ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளமல்ல. சட்டபூர்வமாகக் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாது என்பது நம் சட்ட அமைப்பின் மேல் உள்ள நம்பிக்கையின்மையை அல்லவா காட்டுகிறது!

SCROLL FOR NEXT