மத்திய நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் தாக்கல் செய்யும் வழக்கத்தில் மாறுதல் வரும் என்று தெரிகிறது. நிதிநிலை அறிக்கையை மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யும் மரபை 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியதைப் போல, அறிக்கை தாக்கல் செய்வதையும் ஒரு மாதமோ அல்லது அதற்கும் முன்னதாகவோ மேற்கொள்வதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. சரியாகத் திட்டமிட்டு மேற்கொண்டால் இதனால் நல்ல பலன்கள் ஏற்படுவது நிச்சயம்.
ஏப்ரல் மாதம் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், நாடாளுமன்றம் அதை ஏற்றுச் சட்டமாக்கிய பிறகே அதன் அம்சங்கள் மே மாத வாக்கில் அமலுக்கு வருகின்றன. ஜூன் மாதம் வரை அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் திட்டமிட்டபடி, திட்டமிட்ட இனங்களில் செலவுசெய்வது குறைவாக இருப்பதையே தரவுகள் காட்டுகின்றன. நிதியாண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் வெகு வேகமாக அல்லது அதிகமாகச் செலவுகள் செய்யப்படுகின்றன. ஒதுக்கிய பணத்தை முழுக்கச் செலவழித்துவிட வேண்டும் என்ற அவசரம் மட்டுமல்லாமல், ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்னால் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதாலும் இப்படி ஆண்டுதோறும் நடக்கிறது. வருடாந்திர மூலதனச் செலவு ஆண்டு முழுக்கச் சீராக இருப்பதற்குப் பதிலாக, அக்டோபர் முதல் மார்ச் வரையில் வேகம் பிடிக்கிறது. இதனால் சில திட்டங்கள் சில கட்டங்களில் மெத்தனமாகவும் சில கட்டங்களில் படுவேகமாகவும் நிறைவேற்றப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சியைப் புதுப்பிக்க பொது முதலீடு அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் கடந்த இரண்டு ஆண்டு கால முழக்கமாக இருக்கிறது. இன்னமும் சில காலத்துக்கு இதுதான் பொருளாதாரத்தின் திசை வேகத்தைத் தீர்மானிக்கும் காரணியாகத் திகழப்போகிறது. டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரியிலோ நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட முடியும். இதனால், மத்திய அரசின் அமைச்சகங்களும் மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் நிதியாண்டின் தொடக்கத்திலேயே திட்டங்களை அமல் செய்வதில் தீவிரமாக இறங்கிவிட முடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்னால் வேலையைத் தொடங்கிவிட வேண்டும் என்று அவசரப்படுவதைவிட, இந்தத் திட்டத்தை எப்படி குறிப்பிட்ட காலவரம்பு நிர்ணயித்து நிறைவேற்றலாம் என்று திட்டமிட முடியும்.
அதேசமயம், 2017-ல் நிதிநிலை அறிக்கையை முன்கூட்டியே தாக்கல் செய்ய நிதியமைச்சர் அருண் ஜேட்லி முடிவெடுத்தால், நிதியமைச்சக அதிகாரிகளுக்கு நேரம் போதாது. ஆனால், பொதுச் சரக்கு, சேவை வரியை அமல் செய்ய முடிவெடுத்துவிட்டால், மறைமுக வரிகளைப் பொறுத்தவரையில் அதிகாரிகளுக்கு அதிக வேலை இருக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தனது பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், தான் அளித்த 738 தேர்தல் வாக்குறுதிகளில் 51% அளவுக்கு முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனதற்கு, நிதியாண்டின் முதலிரண்டில் அதிகம் செயல்பட முடியாதது; கடைசி இரண்டு காலாண்டில் வெகு வேகமாகச் செயல்பட வேண்டியிருந்தது, பருவமழைக் காலம் குறுக்கிட்டது போன்றவைதான் காரணம். எனவே, நிதிநிலை அறிக்கையை முன்கூட்டியே தாக்கல்செய்வதால் திட்டங்களை ஆற அமர நிறைவேற்ற அவகாசம் கிடைக்கும். பாஜக அரசு இதை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது என்று பார்ப்போம்!