தலையங்கம்

இயற்கையை எதிர்கொள்வது எப்படி?

செய்திப்பிரிவு

ஹுத் ஹுத் புயல் எதிர்பார்த்தபடியே ஆந்திரத்திலும் ஒடிஸாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக உயிர்ச்சேதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. விசாகப்பட்டினத்தின் 70% முதல் 80% வரையிலான பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துவிட்டதாக தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினர் தெரிவிப்பதிலிருந்தே புயலின் தீவிரத்தை உணர முடிகிறது.

பைலின் புயல் தாக்கியபோதுதான் ஆந்திரமும் ஒடிஸாவும் முதல்முறையாகப் புயல் எச்சரிக்கைத் தகவல்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மக்களை மீட்டுப் பாதுகாக்கும் நடைமுறையை முறைப்படி பின்பற்றி உலக அளவில் பாராட்டு பெற்றன.

அதேபோல் தற்போதும் ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையின் கீழ் மாநில அதிகாரிகள் துடிப்பாகச் செயல்பட்டு, அரசு அமைத்த 370 மீட்பு, உதவி முகாம்களுக்குக் கிட்டத்தட்ட 4 லட்சம் பேரைக் கொண்டுசென்றனர். ஒடிஸாவில் முதல்வர் நவீன் பட்நாயக், 1,56,000 பேரை புயல் முகாம்களுக்குக் கொண்டுசெல்ல வெகு விரைவாக நடவடிக்கை எடுத்திருக்கிறார். புயலில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் பலமாகச் சேதம் அடைந்து, பிற பகுதிகளிலிருந்து எல்லா வகையிலும் துண்டிக்கப்பட்டுவிட்டன. கடற்படையின் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலமாக நீரால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன.

புயல் வீசுவதற்கு முன் இரண்டு மாநிலங்களிலும் மீனவர்கள் தங்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், இதர சாதனங்களை விட்டுவிட்டு வர மனமில்லாமல், நீண்ட நேரம் அவற்றின் அருகிலேயே தங்கியிருந்தனர். இனிவரும் காலங்களில் படகுகள், வலைகளை மீனவர் கள் பத்திரமாக வைத்திருக்க அரசே தக்க ஏற்பாடுகளை நிரந்தரமாகச் செய்துதர வேண்டும். மீனவர்களுடைய குடியிருப்புகளையும் புயல், மழைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுவாகக் கட்டித்தர வேண்டியது அவசியம்.

மீட்புப் பணிகள் பாராட்டும் விதத்தில் நடைபெற்றாலும் இது போன்ற பேரிடர் மேலாண்மையில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களைச் சமாளிக்க தேசிய அளவில் கொள்கை வகுக்கப்பட வேண்டியது அவசியம். மக்களுக்கும் மாணவர்களுக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்த வேண்டியது முக்கியம். இயற்கைச் சீற்றங்களுக்கு அடிக்கடி உள்ளாகும் பிரதேசங்களில் மீட்புப் பணிகளுக்குத் தேவையான கருவிகள், வாகனங்கள் போன்றவை எப்போதுமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

புயலைக் காரணமாக வைத்து மனிதாபிமானமே இல்லாமல் நடத்தப்படும் லாபக் கொள்ளை நம்மை அதிரவைக்கிறது. விசாகப்பட்டினத்தில் ஒரு லிட்டர் பால் ரூ.80-க்கும், 10 லிட்டர் தண்ணீர் கேன் ரூ.2,500-க்கும், ஒரு முட்டை ரூ. 15-க்கும் விற்கப்பட்டிருக் கிறது. இதுபோல் எல்லாப் பொருட்களும் பல மடங்கு விலையுயர்த்தி விற்கப்பட்டிருக்கின்றன. இப்படியெல்லாம் லாபக் கொள்ளை அடிப்பவர் களை அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும். உணவுப் பொருட்களையும் இதர அத்தியாவசியப் பொருட்களையும் முடிந்த அளவுக்கு எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அரசும் மக்களும் எப்போதுதான் உணரப்போகிறார்களோ?

SCROLL FOR NEXT