தலையங்கம்

அடுத்த யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறோம் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி!

செய்திப்பிரிவு

தூக்கித் தூர வீச வேண்டிய கருப்புச் சட்டங்கள் இந்தியாவில் ஏராளம் இருக்கின்றன. தேசத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சட்டங்களுக்கான தேவைகளும் ஒவ்வொரு நாளும் உருவாகின்றன. ஆனால், ஆட்சியாளர்களின் கவனமோ, வணிகம்சார் நலன்களையே எப்போதும் கருத்தில் கொள்ளப் பழகியிருக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ‘கடைகள், நிறுவனங்கள் ஒழுங்காற்று மாதிரிச் சட்டம்’ இதன் தொடர்ச்சி. கடைகள் - வர்த்தக நிறுவனங்கள், சேவைப் பிரிவுகளை நாள் முழுக்கத் திறந்துவைக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி தருவதற்கு வழிவகுக்கும் சட்ட வடிவம் இது. மாநில அரசுகள் இதில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

உலகமயமாக்கலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், வணிக நிறுவனங்களின் செயல்பாடு என்பது லாபம் ஒன்றையே பிரதான இலக்காக ஆக்கிவிட்டது. விளைவாக, பெருநிறுவனங்கள் பலவும் இன்றைக்கு 24 மணி நேரமும் இயங்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன அல்லது மாறிக்கொண்டிருக்கின்றன. நாள் முழுக்கச் செயல்பட்டாலும் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்களை ஒரு நாளைக்கு அதிகபட்சம் எத்தனை மணி நேரம் வேலை வாங்குவது, ஒரு ஊழியருக்கான ஷிஃப்ட்டைத் தீர்மானிக்கும்போது, அவருடைய உடல்நிலையை எந்த அளவுக்குக் கருத்தில் கொள்வது, கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்கான ஊதியத்தை எந்த வகையில் கணக்கிடுவது, ஊழியர்களின் விடுப்பு உரிமைகள் என்ன, பணி செய்யும் இடத்தில் அவர்களுக்குச் செய்துதரப்பட வேண்டிய வசதிகள் என்ன, போக்குவரத்துக்கான ஏற்பாடுகள், பெண்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்களுடைய தனிப்பட்ட பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் என்ன என்பன போன்றவற்றை வரையறை செய்ய அரசின் வலுவான வழிகாட்டல்கள் இங்கே இல்லை.

நம்முடைய கடைகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான சட்டமும் வரைமுறைகளும் ஏட்டளவில்தான் இப்போதும் அமலில் இருக்கின்றன. அவை அப்படியே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. முந்தைய யுகத்தில் தொழிற்சங்கங்களுக்கு இருந்த மதிப்பும், சட்டரீதியாக அவற்றுக்கு இருந்த செல்வாக்கும் இந்த யுகத்தில் செல்லரித்துவிட்டது. கேட்க நாதியற்றவர்களாகிக்கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். பெருநகரங்கள், யாத்திரைத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் என்று ஊர்கள் வெவ்வேறு வடிவங்களில் வளர்கின்றன. மக்கள் புழக்கம் இரவு பகல் வேறுபாடின்றி நீள்கிறது. புதிய சட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது கூடுதல் வணிகம் நடக்கும். விளைவாக, வேலைவாய்ப்பும் பெருகலாம். இனி, ஊர்கள் மட்டும் தூக்கமின்றி விழித்திருக்கப்போவதில்லை; அவற்றின் பின்னணியில் தங்கள் வியர்வையைக் கொடுக்கும் மனிதர்களும் கண் விழித்திருப்பார்கள். அவர்களுக்கான பணிப் பாதுகாப்புக்கும் நுகர்வோரின் உயிர்ப் பாதுகாப்புக்கும் அரசு எந்த அளவில் பொறுப்பேற்கப்போகிறது?

உலகின் போக்குக்கேற்ப, கால ஓட்டத்துக்கேற்ப நாமும் மாற வேண்டும் என்றால், முதலில் அடிப்படை உள்கட்டமைப்பை அதற்கேற்ப உருவாக்க வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்த அளவில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை. முதலாவது, ஊழியர் நலனுக்கான உறுதியான கட்டமைப்பு. இரண்டாவது, நாளின் பெரும் பகுதியில் தடையில்லாமல் இயங்கக்கூடிய பொதுப் போக்குவரத்து. மூன்றாவது, எந்நேரமும் விழிப்புடன் செயல்படக்கூடிய காவல் துறை. ஒரு நிறுவனத்தில் யாரை எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் எனும் சூழலே இன்றைக்கு இருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான பெருநகரங்களிலேயே இரவில் தொடர்ச்சியான பொதுப் போக்குவரத்துச் சேவை பல இடங்களில் இல்லை. சென்னை போன்ற ஒரு நகரத்தில் பட்டப் பகலில் ரயில் நிலையத்தில் பலர் முன்னிலையில் ஒரு பெண்ணைப் போகிற போக்கில் கொல்ல முடிகிறது. இப்படியான சூழலில்தான் இரவைப் பகலாக்கும் ஒரு யுகத்துக்குள் நுழைய நாம் தயாராகிறோம். பெருமை அல்ல; கவலையே மிஞ்சுகிறது!

SCROLL FOR NEXT