தலையங்கம்

நல்ல கொள்ளி உண்டா?

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் மருத்துவமனை ஒன்றில் கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 75-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாடு எதிர்கொண்டிருக்கும் பாதுகாப்புச் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் மற்றொரு நிகழ்வு. இந்தத் தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என்று தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிபிபி) எனும் அமைப்பின் பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரர் (ஜேயூஏ) அமைப்பும், ஐஎஸ் அமைப்பும் பொறுப்பேற்றிருப்பதுதான் நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பின்னடைவைச் சந்தித்த பயங்கரவாதிகள், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

2014-ல் தொடங்கப்பட்ட ஜமாத்-உல்-அஹ்ரர், பாகிஸ்தானின் முக்கியமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்புக்கு இன்னமும் ஜமாத்-உல்-அஹ்ரர் விசுவாசமாகத்தான் இருக்கிறது என்றாலும், ஆரம்பத்தில் ஐஎஸ் அமைப்புக்கு அது ஆதரவு தெரிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 2014-ல் வாகா எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த மார்ச் மாதம் லாகூர் பூங்காவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு உட்பட பல தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது. ஒருவேளை குவெட்டா தாக்குதலுக்கும் இந்த அமைப்புதான் காரணம் என்றால், பாகிஸ்தான் அரசுக்கு இது மற்றுமொரு எச்சரிக்கைதான்!

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ் இருந்தால், அதுவும் கவலை தரும் விஷயம். பாகிஸ்தானில் ஐஎஸ் அமைப்பின் நிர்வாகரீதியான எந்த இருப்பும் இல்லை என்றே அந்நாட்டு அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், ஐஎஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட பெரும் அச்சுறுத்தலை அந்நாடு எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் எல்லையில், ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்கெனவே அந்த அமைப்பு நிலைபெற்றுவிட்டது. மேலும், பாகிஸ்தானின் வட மேற்குப் பிராந்தியத்தில் இயங்கிவரும் ஜிகாதி நிழல் உலக சக்திகள், பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆட்களைத் திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. ஜமாத்-உல்-அஹ்ரர் போன்ற அமைப்புகளுடனான ஐஎஸ் அமைப்பின் நெருக்கம், குவெட்டா சம்பவத்துக்கு இரண்டு அமைப்புகளும் தனித்தனியாகப் பொறுப்பேற்றிருப்பது போன்றவை, தெஹ்ரிக்-இ-தாலிபானின் பிரிவுகள் ஐஎஸ்ஸுடன் இணைந்து செயல்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றன.

இதுபோன்ற நெருக்கடி பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அரசுக்கும் புதியதுதான். பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டு அரசும் ராணுவமும் எடுத்த நடவடிக்கைகள் போதவே போதாது என்பதையே அதிகரித்துவரும் பயங்கரவாதச் சம்பவங்களும், பாகிஸ்தானின் ஜிகாதி வளையத்துக்குள் நுழைந்திருக்கும் புதிய அமைப்புகளும் உணர்த்துகின்றன.

பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு வியூகத்திலேயே பல பிரச்சினைகள் உள்ளன. பயங்கரவாதத்தை ஒரே இரவில் ஒழித்துவிட முடியாதுதான். எனினும், அதை எதிர்கொள்வதற்கு அரசுகளிடம் விரிவான வியூகங்கள் தேவை. ஒருபுறம் உள்நாட்டில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டு, மறுபுறம் ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிராகப் போரிடும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் போக்கு பாகிஸ்தானிடம் உண்டு. ஆப்கன் தாலிபான்களுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவின் காரணமாக, தெஹ்ரிக்-இ-தாலிபானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் சற்றே மென்மையான போக்கைக் கடைப்பிடித்தது. இன்றைக்கு ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அந்த அமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? பாகிஸ்தான் ஒருபோதும் படிக்காத பாடம் இது.

SCROLL FOR NEXT