பொதுவாக, ‘இலவசம்’, ‘பொதுநலன்’ போன்ற வார்த்தைகளே இப்போதெல்லாம் பயமுறுத்தக் கூடியவை ஆகிவிட்டன. அடிப்படை வசதிகளற்ற மக்களுக்காகப் பொதுநல நோக்கத்துடன் கொண்டுவருவதாகச் சொல்லி, சமூக ஊடகத்தின் ஜாம்பவானான ஃபேஸ்புக் அறிவித்திருக்கும் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ திட்டத்தையும் நம்முடைய முன்பாடங்களே சந்தேகத்துடன் பார்க்கவைக்கின்றன.
இணையத்தின் வழித்தடமாக இருப்பதற்கும் அதன் வாயிற்கதவாக இருப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. இத்திட்டம் வாயிற்கதவுபோல அனைவருக்குமான புகுகையைக் கட்டுப்பாட்டுத் தடுப்பாகத்தான் தோன்றுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றுவருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
இந்தத் திட்டம் எல்லையற்ற இணையப் பயன்பாட்டாளர்களை சுவர்களால் சூழப்பட்ட தோட்டத்துக்குள் அடைப்பதைப் போன்றது என்பதை இத்திட்டத்தின் விமர்சகர்கள் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். இலவசம் என்று அறிவித்தால் அதை அனைவரும் முழுமையாக நம்பிவிடுவார்கள் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறதுபோலும். வணிகத்தைப் பொறுத்தவரை ‘இலவசம்’ என்பது வேறு வகையில் அதீதமான லாபத்தைப் பெற்றுத்தரக்கூடிய உத்தி என்பது பலருக்கும் தெரியும். முதலில் இலவசம் என்ற பெயரில் ஒரு பொருளை அல்லது சேவையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றை அன்றாடம் பயன்படுத்தப் பழக்கி, பிறகு அதையே வணிகமாக்கி ஏராளமான லாபம் பார்ப்பது எனும் உத்தியை ஆங்கிலேயர்கள் டீ விற்ற வரலாற்றிலிருந்தே இந்தியர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.
இந்தியர்கள் பலருக்கு இணையம் சென்று சேர வேண்டும் என்ற கருத்தாக்கத்தைப் பரவலாக்கியது ஃபேஸ்புக் நிறுவனத்தின் சாதகமான பங்களிப்பு. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இணையம் பரவலாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதும் குறிப்பிடத் தக்கதுதான். இன்டெர்நெட்.ஆர்க் எனும் திட்டத்தை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி ஓராண்டாகவிருக்கிறது. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தின் முந்தைய வடிவம்தான் அது. ஃபேஸ்புக் நிறுவனத்தையும் இத்திட்டத்தையும் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். இச்சேவையை நிறுத்திவைக்குமாறு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடம் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால், இத்திட்டத்திலிருந்து பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியும் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தென்படவில்லை. அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் எப்படியாவது இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று முன்பைவிட அதிக முனைப்புடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. திட்டத்துக்கு ஆதரவு தேடும் வகையில் மார்க் ஸக்கர்பெர்கே கட்டுரைகளும் எழுதிவருகிறார். விளம்பரங்கள் மூலமாகவும் பிரச்சாரம் நடக்கிறது. இணைய வசதியே இல்லாதவர்களுக்கு, குறிப்பிட்ட சில இணையதளங்களாவது இலவசமாகப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்குமே. அதை ஏன் தடுக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் தரப்பு வாதிடுகிறது.
ஆனால், ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ திட்டத்தை எதிர்ப்பவர்கள் முக்கியமான சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். “முதலாவதாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் சில இணையதளங்களைத்தான் பார்க்க முடியும்; கூகுள், யூடியூப் தொடங்கி ‘ஆன்லைன்’ வர்த்தக இணையதளங்கள் உட்பட பலவற்றையும் பயன்படுத்த முடியாமல் போய்விடும்; நாளடைவில் இணையம் என்றாலே ஃபேஸ்புக்தான் எனும் அளவுக்கு இணையப் பயன்பாடு குறுகிவிடும்” என்கிறார்கள். இணையத்தை உருவாக்கியவரான டிம் பெர்னெஸ் லீ போன்றோர் இதுபோன்ற திட்டங்கள் இணையச் சமவாய்ப்புக்கு ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
இத்திட்டத்தை அரசு மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டியது அவசியம். இணையப் பயன்பாட்டாளர்களும்தான்!