தலையங்கம்

சிரியா விவகாரத்தைத் தவறாகக் கையாள்கிறது அமெரிக்கா!

செய்திப்பிரிவு

ரசாயனக் குண்டு தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் சிரியாவுக்கு உதவிசெய்வதாக நினைத்துக்கொண்டு, அந்நாட்டின் விமான தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது அமெரிக்கா. கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் இத்லிப் மாகாணத்தின் கான் ஷெய்கான் நகரில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில், குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது டிரம்ப் அரசு. சிரியா அதிபர் பஷார் அல் அஸாதின் அரசு அகற்றப்பட வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்திவந்தபோதிலும், சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை அவர் தவிர்த்தே வந்தார். ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீதான நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், சிரியா அரசுக்கு ஆதரவளித்துவரும் ரஷ்யாவுடன் நேரடியான முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஒபாமா அரசு கருதியது.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்நடவடிக்கை சிரியா மக்கள் அனுபவித்துவரும் துயரங்களுக்கு முடிவுகட்டுமா, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருமா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்தத் தாக்குதல் சட்டபூர்வமானதா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. ஒரு நாட்டின் மீது, தற்காப்பு நடவடிக்கை அல்லாத எந்த ஒரு தாக்குதலையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடத்தக் கூடாது என்று ஐ.நா. பட்டயம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. அமெரிக்காவின் இந்நடவடிக்கை, சிரியா அரசுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. சிரியாவுக்கு உதவ மத்தியத் தரைக் கடல் பகுதிக்குப் போர்க் கப்பலை அனுப்பியிருக்கும் ரஷ்யா, சிரியாவில் நேரடி மோதலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட பிரத்யேக அழைப்பு ஏற்பாட்டை முடக்கிவிடப்போவதாகவும் எச்சரித்திருக்கிறது.

ரசாயனத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. நடத்திவரும் விசாரணை முடியும் வரை, சிரியா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை டிரம்ப் பொறுமை காத்திருக்கலாம். பஷார் அல் அஸாதைக் கட்டுப்படுத்திவைக்குமாறு அமெரிக்காவும் மற்ற நாடுகளும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். சிரியா உள்நாட்டுப் போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நீடித்துவருவது என்பது அரசியல்ரீதியான, இனரீதியான, புவிசார் அரசியல்ரீதியான பரிமாணங்கள் கொண்ட இப்பிரச்சினைக்குத் தடாலடியான தீர்வுகள் இல்லை என்பதையே காட்டுகிறது.

பஷார் அல் அஸாதைக் கட்டாயப்படுத்திப் பதவிநீக்கம் செய்வது என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், அது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதலுக்கும், சிரியாவில் மேலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துவிடும். சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் சர்வதேசச் சமூகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும், அதிரடித் தாக்குதல்கள் அல்ல!

SCROLL FOR NEXT